என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.
    10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்த படங்களின் விவரம் வருமாறு:-

    1. கலியுகக் கண்ணன்

    2. ஒரு கொடியில் இரு மலர்கள்

    3. முத்தான முத்தல்லவோ

    4. சிட்டுக்குருவி

    5. பெண்ணை சொல்லிக் குற்றமில்லை

    6. கடவுள் அமைத்த மேடை

    7. சாட்டையில்லாத பம்பரங்கள்

    8. வடை மாலை

    9. ஒரே ஒரு கிராமத்திலே

    10. மகுடி

    11. பெண்கள் வீட்டின் கண்கள்

    12. அவள் ஒரு அதிசயம்

    13. அதிர்ஷ்டம் அழைக்கிறது

    14. பெண்ணின் வாழ்க்கை

    15. என் தமிழ் என் மக்கள்

    16. புரட்சி வீரன் புலித்தேவன்.

    இவற்றில் "வடைமாலை'', வாலியும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இணைந்து டைரக்ட் செய்த படமாகும். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படம், 1982 மார்ச் மாதம் 12-ந்தேதி வெளிவந்தது.

    வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், "சிறந்த படம்'' என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் விருதையும் பெற்றது.

    "என் தமிழ், என் மக்கள்'' என்ற படம், சிவாஜிகணேசன் நடித்து, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்ததாகும்.

    "புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

    "என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.

    காரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல? அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்.

    அதனால், தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து, ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு சொன்னார்: "கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை; வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை'' என்று.

    இன்னும் சொல்லப்போனால், நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, "இது தமிழுக்குக் கிடைத்த பெருமை'' என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே, தம்பி வைரமுத்துதான்.

    ஏவி.எம்.சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே.

    இப்படியெல்லாம் அனைவரது அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொல்லப்போனால், என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காத்து வந்திருக்கின்றேன்.

    இவ்வாறு வாலி கூறினார்.

    "பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது நல்லதா? அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா?'' என்ற கேள்விக்கு பதில் அளித்து வாலி கூறியதாவது:-

    "என்னைப் பொறுத்தவரையில், இரண்டுமே சரியான வழிகள்தாம். போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன?

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும் சரி, இசைஞானி இளையராஜா இசையிலும் சரி, நான் எத்துணையோ பொருட்செறிவு மிகுந்த பாடல்களை அவர்கள் கொடுத்த மெட்டுக்கு எழுதியிருக்கிறேன்.

    உதாரணமாக இரண்டைச் சொல்கிறேன்:

    விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் வரும் "உலகம் ஒரு பெண்ணாகி'' என்ற பாடல்.

    இளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் "தாய் மூகாம்பிகை'' படத்தில் வரும் "ஜனனீ... ஜனனீ...'' என்ற பாட்டு.

    இந்த இரண்டு பாட்டுகளும் தரமாக இல்லையா என்ன? தமிழ் சிதிலப்பட்டிருக்கிறதா, என்ன?

    ஒரு மெட்டுக்கான சிறந்த பாட்டை எழுதுவது எப்பொழுதும் சாத்தியமான காரியம்தான். ஆனால் அதற்குரிய கால அவகாசம், இன்றைய அவசர சினிமாவில் கிடைப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இசையமைப்பாளர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இசையமைக்க இருக்கும் ஒரு படத்திற்கு பாட்டெழுத நான் ஒப்பந்தமாகியிருந்தேன். ஒரு மரியாதை நிமித்தம், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தார் அந்த இசையமைப்பாளர்.

    அவர் தந்தையை நான் பல்லாண்டுகளுக்கு முன்பே நன்கறிந்து பழகியவன். அதையும் எனக்கு நினைவுபடுத்தி, தன்னை அவருடைய மகன் என்று தெரிவித்துக் கொண்டார், அந்த இளம் வயது இசையமைப்பாளர்.

    "என்ன தம்பி! டியுன் கொண்டு வந்திருக்கியா?'' என்று நான் அன்போடு வினவினேன்.

    "இல்லை சார்! எனக்கு டியுன் போட்டு உங்ககிட்டக் கொடுக்க ரொம்ப நாழி ஆகாது. இருந்தாலும், எனக்கு என் டியுனைவிட, உங்க வார்த்தைகள்தான் முக்கியம். நீங்க எழுதிக் கொடுங்க... நான் நாலஞ்சு விதமா டியுன் போட்டு, உங்ககிட்ட காட்டுகிறேன்...'' என்றார் அந்த இளைஞர்.

    உடனே நான் சொன்னேன்: "தம்பி! இது ஒரு சிச்சுவேஷன் சாங் இல்லை. பசங்க ஜாலியாப் பாடுற பாட்டு. இதுக்கு ரிதம்தான் முக்கியம். அதனாலே நீ டியுன் போட்டு, அதற்கு நான் பாடல் எழுதினால்தான் நல்லாயிருக்கும். டியுனைப் போட்டு நாளைக்கு அனுப்பு. நான் பாட்டு எழுதி வைக்கிறேன். இருந்தாலும், `பாட்டெழுதி அதுக்கு டியுன் போடணும். வார்த்தைதான் முக்கியம்' அப்படின்னு நீ சொன்னதுக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று சொல்லி, அந்த இசையமைப்பாளரை வாழ்த்தி அனுப்பினேன்.

    பிறகு, அந்த இளம் வயது இசையமைப்பாளரிடமிருந்து மறுநாள் டியுன் வந்தது... நான் பாட்டெழுதிக் கொடுத்து அனுப்பினேன்.

    பாட்டு பயங்கரமாக பாப்புலர் ஆனது.

    அந்த இளம் வயது இசையமைப்பாளர்தான், என் நண்பர் சேகரின் மைந்தன், ஏ.ஆர்.ரகுமான்.

    அப்போது நான் எழுதிக் கொடுத்ததுதான் "ஜென்டில்மேன்'' படத்தில் வருகிற "சிக்குபுக்கு ரயிலு'' பாடல்.''

    இவ்வாறு வாலி கூறினார்.



    2.ஓ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு அனைவரும் வாயைப் பிளக்கும் அளவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.ஓ’. இப்படத்தில் ரஜினி, எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்க்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.



    ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அக்ஷய்குமாருக்கு சம்பளம் ஒருநாள் கணக்கில் பேசப்பட்டுள்ளதாம். அதன்படி, நாள் ஒன்றுக்கு அக்ஷய்குமாரின் சம்பளம் ரூ.2 கோடியாம். தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கு ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. ஐமேக்ஸ் என்ற தொழில்நுட்பத்தில் இப்படம் வெளிவரவிருக்கிறதும். தமிழில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
    தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    தனுஷ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையொட்டி நேற்று ரசிகர்களிடம் டுவிட்டர் பக்கத்தில் நேரடியாக பேசிய தனுஷ், தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது,

    நான் நடிக்கவிருக்கும் ‘மாரி-2’ படத்தை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளோம். கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணையவிருக்கும் படம் அக்டோபர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. ஹாலிவுட்டில் நான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.



    அடுத்ததாக படம் இயக்குவது பற்றி இன்னும் நான் யோசிக்கவில்லை. வேலையில்லா பட்டதாரி-2 மிகவும் சிறப்பாக வந்துள்ளது. விஐபி1-ஐ விட இந்த படம் உங்களை சந்தோஷப்படுத்தும், காஜோலின் நடிப்பும் பேசப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    விஜய் நடிப்பில் தமிழில் வெளிவந்த ‘பைரவா’ படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிநடை போட்ட  படம் ‘பைரவா’. இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா வினோத் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    தமிழில் வெற்றிபெற்ற இப்படம் இப்போது தெலுங்கில் ‘டப்’ செய்யப்படுகிறது. தெலுங்கிலும் ‘பைரவா’ என்ற பெயரிலேயே இது வெளியாகவுள்ளது. இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதாலும் கீர்த்திசுரேஷ் இப்போது தெலுங்கில் பிரபலமாகி வரும் நாயகி என்பதாலும் இதற்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கு ‘பைரவா’வை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    ராகவா லாரன்ஸ் - ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சிவலிங்கா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சக்திவேல் வாசு மற்றும் அவரது அப்பா சந்தானபாரதி இருவரும் பிரியாணி மாஸ்டர்கள். நடிகை சாராவும் அவரது அப்பாவான ராதாரவியும் சைவ உணவு மாஸ்டர்கள். இந்த இரு குடும்பமும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே சமைப்பார்கள். இந்த நெருக்கமானது, சக்திவேல் வாசுவுக்கும், சாராவுக்கும் இடையே காதலை உண்டாக்கியது.

    ஆனால், இவர்களுடைய காதல் சாராவின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. சக்தி சமைப்பதோடு மட்டுமில்லாமல் புறா ஒன்றயும் பாசமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், வெளியூருக்கு சமையல் வேலையாக ரெயிலில் சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் சக்தியை ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையில் ரெயில்வே போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் சக்தி தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி வழக்கை முடிக்கிறது.



    ஆனால், சாராவோ இது தற்கொலை இல்லை, கொலை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் செல்கிறது. சிபிசிஐடியில் பெரிய போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கும், ரித்திகா சிங்கிற்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த கையோடு, சக்தி கொலை வழக்கு லாரன்ஸ் வசம் செல்கிறது. அவர் இதைப்பற்றி விசாரிப்பதற்காக தனது மனைவியுடன் வேலூரில் இருக்கும் ஒரு பங்களாவில் குடியேறுகிறார்.

    அங்கு தங்கியதும் அவ்வவ்போது சில அமானுஷ்ய விஷயங்கள் நடந்து இவர்களை பயமுறுத்துகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் திருட வந்த வடிவேலு, ராகவா லாரன்சிடம் மாட்டிக் கொள்கிறார். தான் சிபிசிஐடி என்பது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வடிவேலுவையும் அங்கேயே தங்க வைக்கிறார் லாரன்ஸ்.



    இந்நிலையில், ரித்திகா சிங் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இதை பார்க்கும் வடிவேலு, லாரன்சிடம் சொல்ல, அவர் நம்ப மறுக்கிறார். ஒருகட்டத்தில் ரித்திகாவின் உடம்பில் ஏதோ ஆவி புகுந்து இருப்பது லாரன்ஸ் மற்றும் வடிவேலுக்கு தெரியவர, அந்த ஆவி கொலை செய்யப்பட்ட சக்தியின் ஆவிதான் என்பதை தெரிந்துகொள்கிறார்கள்.

    சக்தியின் ஆவி ரித்திகா சிங்கின் உடம்பில் புகுந்துகொண்டு, தன்னை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறது. அந்த ஆவியின் ஆசையை நிறைவேற்றினால்தான் தன்னுடைய மனைவியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், ராகவா லாரன்ஸ் அதன்பிறகு என்ன முடிவெடுத்தார்? சக்தியை கொலை செய்தது யார்? அவரை எதற்காக கொன்றார்கள்? சக்தியின் கொன்றவர்களை ராகவா லாரன்ஸ் எப்படி கண்டுபிடித்தார்? என்பதை திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.



    சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக வரும் ராகவா லாரன்ஸ் நடனம், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என எல்லாவற்றையும் ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். பேய் படங்களில் நடிக்க இவருக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கவேண்டியதில்லை. அந்தளவுக்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ரித்திகா சிங், துறுதுறு பெண்ணாக ரொம்பவும் ரசிக்க வைக்கிறார். இவர் பாக்சர் என்பதை மனதில்வைத்து பேயாக வரும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் இவரை அந்தரத்தில் தொங்கவிட்டு நடிக்க வைத்திருக்கிறார். ரித்திகா சிங் அதையெல்லாம் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நேர்த்தியாகவே செய்திருக்கிறார். இந்த படத்தில் புதிய முயற்சியாக புடவையில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அதேபோல், நடனத்திலும் லாரன்ஸுக்கு இணையாக ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.



    சக்திவேல் வாசுவை மையப்படுத்திதான் கதையே நகர்கிறது. கிளைமாக்சில் தன்னுடைய வேதனையை சொல்லி இவர் அழும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. இப்படம் அவருக்கு நல்ல ரீ-என்ட்ரியாக அமையும் என நம்பலாம்.

    வடிவேலு எந்தவித கெட்டப்பும் இல்லாமல் சாதாரணமாக வந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர் காமெடியனாக மீண்டும் நடிக்கத்தொடங்கியதில் இந்த படம்தான் இவரது காமெடியை தூக்கி நிறுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி, ஊர்வசி, ராதாரவி, ஜெயப்பிரகாஷ், பானுப்ரியா, இன்னொரு நாயகியாக வரும் சாரா, பிரதீப் ராவத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் ஷாகிர் ஹூசைனும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.



    கன்னடத்தில் தான் இயக்கி வெற்றிபெற்ற படத்தையே தமிழிலும் எடுத்திருக்கிறார் பி.வாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஜனரஞ்சகமான படத்தை கொடுத்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சற்று மாற்றங்கள் கொண்டுவந்து விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். கொலைக்கான விசாரணையில் ஒவ்வொரு டுவிஸ்டுகளாக வைத்து அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை படம் முழுக்க கொடுத்திருக்கிறார். அதேபோல், கதாபாத்திரங்கள் தேர்வும் சிறப்பு.

    தமன் இசையில் பாடல்கள் பிரமாதம். சில பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும், மெலோடி பாடல்கள் தென்றலாகவும் வருடி சென்றிருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டல். சர்வேஸ் முராரேயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் திகில் ஊட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘சிவலிங்கா’ திரிலிங்கா இருக்கு.
    தேசிய விருதுகளை தேர்வு செய்யும் குழு மீது ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பாய்ந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    2016-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பல தமிழக தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்வாகியிருந்தனர். தேசிய விருதுகள் தேர்வு சிலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்திருந்தது.

    இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் தனது அதிருப்தியை தெரிவித்தார். தேசிய விருதுகளுக்கான நபர்கள் ஒருதலைபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதனால் சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தேர்வு குழுவில் இருந்த பிரியதர்ஷனும் விளக்கம் கூறியிருந்தார்.



    இந்நிலையில், தேசிய விருதுகள் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் ஒரு கருதை முன்வைத்துள்ளார். அதாவது, தேசிய விருதுகள் குறித்து நான் கூறியது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து. வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்று மறுபடியும் நடுவர் குழுவினரை சாடியுள்ளார்.

    ஏ.ஆர்.முருகதாசின் இந்த கருத்தால் மீண்டும் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண், தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். வயதானாலும் இவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார்.

    இதனால் போலீஸ் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறது. இது பிரசன்னாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ராஜ்கிரணிடம் பிரசன்னா கடுமையாக நடந்துகொள்கிறார். எனவே, இவர்களுக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் ராஜ்கிரண், வீட்டைவிட்டு வெளியேறி தனது புல்லட்டில் நீண்ட தூரம் பயணம் செய்கிறார்.



    அப்போது வழியில் அவரது வயதையொட்டிய சிலபேர் நண்பர்களாக கிடைக்க, அவர்களிடம் தனது முதல் காதலியை பார்க்க செல்வதாக கூறுகிறார். அவள் எங்கிருக்கிறாள்? என்பது தெரியாத ராஜ்கிரணுக்கு, நண்பர்கள் பேஸ்புக் பற்றி அவருக்கு தெரியவைத்து, அதன்மூலம் அவரது காதலியை தேட துணை புரிகிறார்கள்.

    அதன்படி, ராஜ்கிரணும் தனது காதலி ஐதராபாத்தில் இருப்பதாக அறிந்து, அங்கே செல்ல முடிவெடுக்கிறார். இதற்கிடையில், அப்பாவை காணாது தவிக்கும் பிரசன்னா, அவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.



    கடைசியில், ராஜ்கிரண் தனது முன்னாள் காதலியை தேடிக் கண்டுபிடித்தாரா? பிரசன்னாவும் காணாமல் போன தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை. இதற்கிடையே, ராஜ்கிரணின் இளமை கால நினைவுகளும் வந்து கதையை நகர்த்தி செல்கிறது.

    ராஜ்கிரண், பவர் பாண்டியாக படம் முழுக்க பவருடன் வலம் வருகிறார். குழந்தைகளுக்கு நல்ல தாத்தாவாகவும், மகனுக்கு நல்ல அப்பாவாகவும் அழகாக பொருந்தியிருக்கிறார். முதல் பாதியில் பிள்ளைகளுக்காக வாழும் வாழ்க்கையில் சாந்தமாகவும், பிற்பாதியில் தனக்காக வாழும் வாழ்க்கையில் இளமை துள்ளலுடன், மாடர்ன் உடையில் வந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.



    படம் முழுக்க இவர் பேசும் பாசமிகு வசனங்கள் அனைவரையும் கவரும். ரேவதியுடன் தன்னுடைய ஆசையை சொல்லும்போது வெட்கப்படும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. பவர் பாண்டி கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு அழகாக பிரதிபலித்திருக்க முடியாது. ராஜ்கிரணை தேர்வு செய்தபோதே தனுஷ் பாதி வெற்றிபெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டும் ரேவதி, இடைவேளைக்கு பிறகே வருகிறார். இவருக்கான காட்சிகள் கொஞ்சம்தான் என்றாலும், அவருடைய அனுபவ நடிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இளம்வயது ராஜ்கிரணாக வரும் தனுஷுக்கும், இளம் வயது ரேவதியாக வரும் மடோனா செபஸ்டியானுக்கும் இடையே உண்டான காதல் காட்சிகள் மனதில் ரீங்காரமிடுகின்றன.



    பிரசன்னா, பாசமிகு தந்தைக்கு பொறுப்பான மகனாக வருகிறார். ராஜ்கிரண் செய்யும் சில செய்கைகளால் அவர்மீது கோபப்படும் பிரசன்னா, அவர் பிரிந்துசென்றபிறகு, அவரை நினைத்து வருந்துவதும், அவருடைய பெருமைகளை மனைவியிடம் பகிர்ந்துகொள்ளும் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் இவருக்குத்தான் அதிகமாக இருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய தோற்றமும் அனைவரையும் கவரும்விதமாக இருக்கிறது. அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு இவர் கூறும் அறிவுரைகள் எல்லாம் பெற்றோர்களை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளுக்கு பாடம் புகட்டும்விதமாக அமைந்திருக்கிறது.

    சாயா சிங் பொறுப்பான மனைவியாகவும், மாமனாருக்கு அடங்கி நடக்கும் மருமகளாகவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். குழந்தைகளாக வரும் மாஸ்டர் ராகவன், பேபி சவி ஷர்மா கேமரா முன் நிற்பது முதன்முறை என்றாலும், அது தெரியாத அளவுக்கு அழகாகவும், தைரியமாகவும் நடித்திருக்கிறார்கள்.



    ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பெற்றோர்களை பிள்ளைகள் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்? அந்த பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? பெற்றோர்களுக்கான சுதந்திரத்தை பிள்ளைகள் கொடுக்கிறார்களா? என்பதையெல்லாம் இப்படத்தில் கேள்வியாக எழுப்பி, அதற்கான பதிலையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். இருக்கும்போதே அவர்களை சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் பிள்ளைகள் வாழவைக்கவேண்டும் என்றும், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் பிள்ளைகளுக்கு புரிய வைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு இந்த படம் ஒரு பாடமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். தனுஷ் தனது முதல் படத்திலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும்படியான ஒரு படத்தை கொடுத்ததற்கு நிச்சயம் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.



    ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. மெலோடியாக வரும் ‘வெண்பனிமலரே’ பாடல் தென்றலாக வருடிச் செல்கிறது. அதேபோல், இளம்வயது பவர் பாண்டியின் காதல் பாடலாக வரும் ‘பார்த்தேன்’ பாடலும் காதலை அழகாக சொல்லியிருக்கிறது. பின்னணி இசையிலும் ஷான் ரோல்டன் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. ஒருசில காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள் வசனங்கள் இல்லாமலேயே கதையை பேசவைக்கிறது.

    மொத்தத்தில் ‘ப.பாண்டி’ பவர்புல் பாண்டி. 
    ஆறுபடை மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாலி லாலி ஆராரோ’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஆறுபடை மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாலி லாலி ஆராரோ’.

    இந்த படத்தில் நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஷிவானி அறிமுகமாகிறார். இவர் களுடன் மனோபாலா, லட்சுமி பிரியாமேனன், ஷினாஜ், ஜீவா ரவி, திவாகர் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.கே.வில்லனாக நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு -நாக பூ‌ஷன் , இசை-ராம கோபால கிருஷ்ணன், பாடல்கள் -ராஜகனி, எடிட்டிங் -ஆனந்த்.ஆர்.ஜி, நடனம்- ராபர்ட்சுரேஷ், ஸ்டண்ட்- ஓம் பிர காஷ், கலை- மகிரங்கி. தயாரிப்பு ஆறுபடையப்பன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - லிங்கன் ராஜாளி



    படம் பற்றி இயக் குனரிடம் கேட்ட போது....

    “அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி. தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்று நினைக்கும் அம்மா. இவர்களுக்கு இடையில் காதலியாக, மதுரா உள்ளே வர, அதை அந்த குடும்பம் எப்படி எதிர் கொள்கிறது? தன் மகள் தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு அப்பா. அவரைத் தவிர உலகத்தில் உயர்ந் தது இல்லை என்று கருதும் மகள். இவர் களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர அதை எப்படி அந்த குடும்பம் எதிர் கொள்கிறது? என்பது தான் இந்த படத்தின் கதை.

    இதை சென்டிமென்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கி உள்ளோம்” என்றார். படப்பிடிப்பு நாகர்கோவில், கேரளா பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் நடைபெறுகிறது.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக பதவி வகித்தபோது, ஒரு படத்தில் நடிக்க ஏற்பாடு நடந்தது. பாடல் பதிவும் நடந்தது. ஆனால், அத்துடன் படம் கைவிடப்பட்டது.

    1977-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சரானார்.

    தேர்தலில் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர். நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்ற படம் முடிவடையும் தருணத்தில் இருந்தது. மீதியிருந்த இரண்டொரு காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். அதன்பின் நடிக்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், 1978-ல் அவர் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். அதுபற்றி, கவிஞர் வாலி எழுதியிருப்பதாவது:-

    `அக்கரைப்பச்சை', `இளைய தலைமுறை' முதலிய படங்களைத் தயாரித்த என் நண்பர் ஜி.கே.தர்மராஜ் அவர்களும், புகழ் வாய்ந்த ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களும் ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வந்தார்கள்.

    "நான் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நண்பர் மாருதிராவும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நíங்கதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எல்லாம் எழுதணும்'' என்று வந்த விஷயத்தை சுருக்கமாக விளக்கினார், தர்மராஜ்.

    ``இப்போது என் கைவசத்தில் எந்தக் கதையும் இல்லையே...'' என்று நான் தயங்கியவாறே சொல்லிவிட்டு, "யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்?'' என்று தர்மராஜை வினவினேன்.

    "யார் ஹீரோவா நடிக்கப்போகிறார்ங்கறதை அப்புறம் சொல்றேன். ஆனால் அந்த ஹீரோதான் உங்ககிட்ட கதையை வாங்கி, வேலையை ஆரம்பிக்கச் சொல்லி எங்களை இங்கே அனுப்பினார்...'' என்று மாருதிராவ் ஒரு சஸ்பென்ஸ் வைத்துப் பேசினார்.

    "அவருக்கு எப்படிக் கதை எழுதணும்னு, உங்களுக்குத்தான் தெரியும்னு அவரே சொன்னாருங்க. அவர் வீட்லேருந்துதான், அவர் சொல்லி அனுப்பித்தான் நாங்க நேர உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்...'' என்று புன்னகைத்தார், தர்மராஜ்.

    நான்தான் கதை வசனம் எழுத வேண்டுமென்று என் எழுத்தில் அவ்வளவு ஆர்வம் கொண்டு, இவர்களை என் வீட்டிற்கு அனுப்பிய ஹீரோ யாராக இருக்கக்கூடும் என்று நான் வியப்பும், மகிழ்வும் விழிகளில் குமிழியிட ஒரு வினாடி சிந்தனையில் ஆழ்ந்தேன்.

    பிறகு, தர்மராஜிடம், "உங்களை என்கிட்ட அனுப்பிச்ச ஹீரோ யாரு சார்? அதெ முதல்ல சொல்லுங்க...'' என்று விடாப்பிடியாகக் கேட்டேன்.

    அவர் யாரென்று, தர்மராஜ் சொன்னதும் நான் திகைத்துப்போனேன். இது கனவா? நனவா? என்று நான் கிள்ளிப் பார்க்காத குறைதான்.

    "நிஜமாவா சொல்றீங்க?'' என்று நான் மாருதிராவிடமும், தர்மராஜிடமும் மாறி மாறிக்கேட்டேன்.

    "உங்களுக்கு சந்தேகமிருந்தா, நீங்க வேணும்னா அவர்கிட்டயே, போன் பண்ணிப் பேசுங்க...'' என்றார் தர்மராஜ்.

    "அதுக்குக் கேக்கலீங்க. அவர் சினிமாவில் நடிக்க முடியாதே... அப்படியிருக்கும்போது எப்படி உங்ககிட்ட நடிக்கிறேன்னு ஒத்துக்கிட்டாரு? சாத்தியமில்லாத விஷயத்தைச் சொல்றீங்களே சார்!'' என்று சொன்னேன் நான்.

    தர்மராஜ் மெல்லிய புன்னகையை இதழோரம் இழையவிட்டவாறே, "இந்தப் பத்தாயிரம் ரூபாயை அட்வான்சா வாங்கிக்கங்க. அப்புறம் அண்ணனோட நீங்களே பேசி, அவர் நடிக்கிறார்ங்கற விஷயத்தை உறுதி பண்ணிக்கிட்டு, கதை எழுத ஆரம்பியுங்க...'' என்று என் கையில் காசோலையைத் திணித்துவிட்டு மாருதிராவுடன் காரில் ஏறிப்போய்விட்டார்.

    மறுநாள் அதிகாலையிலேயே நானே என் காரை ஓட்டிக்கொண்டு அன்புக்குரிய என் அண்ணனை அவர் இருப்பிடத்தில் சந்தித்து, "நீங்க படத்திலே நடிக்க ஒத்துக்கிட்டு, என்னைக் கதையெழுதச் சொல்லி தர்மராஜையும், மாருதிராவையும் என் வீட்டுக்கு அனுப்பிச்சீங்களாண்ணே!'' என்று ஒரே மூச்சாகப் பேசி முடித்தேன்.

    "ஆமாம். நான் நடிக்கப்போகிறேன்... சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. ஏப்ரல் 14-ந்தேதி பூஜை!'' என்று அவர் சொன்னதும் நான் வியப்பால் வாயடைத்துப்போனேன்.

    ஏனெனில் என்னிடத்தில் படத்தில் நடிக்கப்போவதாகச் சொன்னவர், அப்போது முதல்-அமைச்சராகக் கோட்டையில் கொலுவிருந்த என் அன்பு அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள்.

    "ஏண்ணே, நீங்க முதல்-அமைச்சரா இருந்துக்கிட்டு சினிமாவில் நடிக்கறது...'' என்று நான் சொல்வதற்குள், "சாத்தியமான்னு கேக்குறீங்களா? சாத்தியமா இருக்கத் தொட்டுத்தான் உங்களைக் கதை எழுதச் சொல்றேன்'' என்று பாசத்தோடு என் கன்னத்தை வருடினார் எம்.ஜி.ஆர்.

    நான் வீடு வந்து சேர்ந்தேன். இரவு பகலாக உட்கார்ந்து எம்.ஜி.ஆர். நடிப்பதற்காக ஒரு கதையை உருவாக்கினேன்.

    10 நாட்கள் கழித்து, `கதை தயார்' என்று எம்.ஜி.ஆருக்கு டெலிபோன் செய்தேன்.

    அன்று இரவு, அண்ணன் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினரும், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவருமான குஞ்சப்பன், என் வீட்டிற்கு வந்தார்.

    "நாளைக் காலை 6 மணி விமானத்தில் சி.எம். கூட நீங்களும் மதுரைக்குப் போறீங்க. விமானப் பயணத்திலேயே கதையைக் கேட்டுக்கறேன்னு சொன்னாரு. அடுத்த நாள் விமானத்தில் நீங்க மதுரையிலிருந்து மெட்ராசுக்குத் திரும்பிடலாம். அதுக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கறேன்'' என்று குஞ்சப்பன் தான் வந்த விஷயத்தை விளக்கிச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    விமானத்திலேயே எம்.ஜி.ஆருக்குக் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. திருநெல்வேலிக்கும் என்னை உடன் அழைத்துச் சென்றார். அன்று இரவு நெடுநேரம், நானும் அவரும் அந்தக் கதையைப் பேசிப் பேசி மெருகேற்றினோம்.

    படத்திற்கு, "உன்னை விடமாட்டேன்'' என்று தலைப்பு வைத்தால் நன்றாயிருக்கும் என்று சொன்னேன். எம்.ஜி.ஆர். பொன்னிறம் மின்னப் புன்னகைத்தார். அவர், புன்னகைத்தால் `சம்மதம்' என்று அர்த்தம்.

    சென்னை வந்த பிறகு திரைக்கதையை எழுதும் பணியில் நான் ஈடுபட்டாலும், `ஒரு மாநில முதல்-அமைச்சர் சினிமாவில் நடிப்பதை, மத்திய அரசு எப்படி ஒத்துக்கொள்ளும்' என்கிற சந்தேகம் என் சிந்தனை ஓட்டத்தை அவ்வப்போது தடை செய்து கொண்டுதானிருந்தது.

    ஓரிரு வாரங்கள் கழித்து ஒருநாள் அதிகாலையில் தொலைபேசியின் மணி, என் துயிலைக் கலைத்தது.

    ரிசீவரை எடுத்து, `ஹலோ!' என்றேன்.

    `வாழ்க!' என்று சொல்லிவிட்டு, "காலை பேப்பர் பார்த்தீங்களா? உடனே எடுத்துப் பாருங்க'' என்றார் எம்.ஜி.ஆர். உடனே போனை வைத்துவிட்டார்.

    "மாநில முதல்-அமைச்சராக இருந்து கொண்டு, தன் கடமைகளுக்கு குந்தகம் வராமல் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை'' என்று பொருள்பட பத்திரிகையாளர்களிடம் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள் சொல்லியிருந்த விஷயம், பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.

    பிறகென்ன! இரவு பகலாக திரைக்கதையை எழுதி முடித்தேன். படத்தின் இயக்குனராக கே.சங்கரை அமர்த்திக் கொள்ளும்படி எம்.ஜி.ஆர். என்னிடத்திலும், தயாரிப்பாளர் தர்மராஜிடமும் சொன்னார்.

    "யாரை இசையமைப்பாளராகப் போடுவது?'' என்று தர்மராஜ் கேட்டார்.

    "புதுசா ஒரு பையன் வந்திருக்கிறாரே! அந்தப் பையனைப் போட்டுக்கலாம். பாட்டெல்லாம் கேட்டேன். நல்லாயிருக்கு'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "நீங்க, இளையராஜாவைச் சொல்றீங்களா?'' என்றேன் நான்.

    "ஆமாய்யா!'' என்றார் எம்.ஜி.ஆர்.

    பிறகு என்னைப் பார்த்து, "நீங்கபோயி பூஜைக்கு தலைமை தாங்க வரச்சொல்லி, கவர்னரைக் கூப்பிடுங்க. தர்மராஜையும் அழைச்சுக்கிட்டுப் போய், நான் சொன்னேன்னு சொல்லுங்க...'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பேரில், நானும், தர்மராஜ×ம் கவர்னர் மாளிகைக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்ள அழைத்தோம்.

    `என்ன கதை? என்ன மாதிரிப்படம்?' என்றெல்லாம் கவர்னர் என்னிடம் கேட்டறிந்து கொண்டு, வருவதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

    பிறகு, சில காரணங்களை முன்னிட்டு கவர்னர் வருகை தவிர்க்கப்பட்டது.

    பிரசாத் ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவுடன், எம்.ஜி.ஆர். அவர்களும், ஏனைய அமைச்சர்களும் கலந்து கொள்ள படத்தின் பூஜைக்கான அழைப்பிதழ்கள் அச்சாகிக் கொண்டிருந்தன.

    விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக அண்ணன் எம்.ஜி.ஆர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, "படத்துவக்க விழாவிற்கு, நாஞ்சில் மனோகரனைத் தலைமை தாங்கச் சொல்லி கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் வரவேற்புரையை நிகழ்த்துங்கள்'' என்று என்னைப் பணிந்தார்.

    பூஜை, குறிப்பிட்ட நாளில் கோலாகலமாக நடந்தது. இளையராஜாவின் இசையில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, எம்.ஜி.ஆர். முன்னிலையில் பாடல் ஒலிப்பதிவாயிற்று.

    அந்நாளில் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்து கொண்டே, படத்திலும் நடிக்கப் போகிறார் என்னும் செய்தியை, அன்றாடம் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் கொண்டு வந்தன.

    ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, படத்தில் நடிப்பதை, என்ன காரணத்திற்காகவோ எம்.ஜி.ஆர். மறுபரிசீலனை செய்து தவிர்த்து விட்டார்.

    காரணத்தை நானும் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    அதர்வா அடுத்தாக 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய இயக்குனருடன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    புதுமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘8 தோட்டாக்கள்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷுக்கு திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    இப்படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் அடுத்தாக அதர்வாவை வைத்து படம் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது. அதர்வா தற்போது தனது சொந்த தயாரிப்பில் ‘செம போத ஆகாதா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.



    ஸ்ரீகணேஷ் இயக்கும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. அடுத்தக்கட்டமாக கதாநயாகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வை படக்குழுவினர் நடத்தவுள்ளனர். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு நடிகர் பிரபு அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகர் பிரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்னுடைய தந்தை சிவாஜி கணேசன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். அதிகமான மன்றங்களை தொடங்கி பெருமை சேர்த்தனர். அவர் நாடகம் நடித்த காலத்தில் நெல்லைக்கு அதிக முறை வந்திருந்தார். நானும் பலமுறை தந்தையுடன் நெல்லைக்கு வந்துள்ளேன். அவரது கையைப்பிடித்து நெல்லை வீதிகளில் வலம் வந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.

    தாமிரபரணி சினிமா படப்பிடிப்புக்கு நெல்லைக்கு நான் வந்த போது இங்குள்ள மக்கள் சிவாஜியுடன் பழகிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். மேலும் சிவாஜி புரெடக்‌ஷன்ஸ் சார்பில் அடுத்த படம் விரைவில் தயாரிக்கப்படும். கமல் ஹாசனுடன், வெற்றி விழா 2-வது பாகம் தற்போது உருவாகும் திட்டம் இல்லை.



    இதற்கிடையே தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பிரபு நிருபர்களை பார்த்து பதில் கேள்வி கேட்டார். அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    அதன் பிறகு பிரபு, என்னுடைய தந்தை சிவாஜி காலத்தில் இருந்தே எனக்கு அரசியல் மீது ஆர்வம் கிடையாது. ஆனால் இந்திய குடிமகனாக அரசியல் நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் இன்றைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கூறுங்கள் என்று கேட்டதற்கு, எல்லாம் நன்மைக்கே. இது தொடர்பாக மேலும் கேட்க வேண்டாம் என்று நகைச்சுவையுடன் பேட்டியை நிறைவு செய்தார்.

    பேட்டியின் போது பிரபு ரசிகர் மன்ற நெல்லை மாவட்ட தலைவர் பாலசந்தர், தூத்துக்குடி மாவட்ட தலைவர் குமாரமுருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
    தமிழகத்தில் பாகுபலி 2 படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க கோரிய மனுவை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

    சென்னை ஐகோர்ட்டில் ஏ.சி.இ. என்ற நிதி நிறுவனம் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதில், ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் பாகுபலி-2 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட உரிமம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சரவணன், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடன் கேட்டார்.

    இந்த தொகை பிரபுதேவா ஸ்டூடியோ நிறுவனத்தில் பெயரில் வழங்கப்பட்டது. இந்த கடன் தொகையுடன் ரூ.10 லட்சம் வட்டியுடன் சேர்த்து, பாகுபலி படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தருவதாக சரவணன் கூறினார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தமும் செய்யப்பட்டது.


    இந்த கடன் தொகையை பாகுபலி-2 படம் வெளியான பின்னர் தருவதாக சரவணன் கூறுகிறார். இது கடன் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். மேலும், அவருக்கு கடனை திருப்பித் தரவேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனவே, கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தராமல் பாகுபலி-2 படத்தை வெளியிடக்கூடாது என்றும் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதித்தும் உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஸ்ரீகிரீன் புரொடக்சன் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை பாகுபலி-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். விசாரணையை வருகிற 18-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    ×