என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    அட்லி படத்தின் பாடல்கள் கமல் வெளியிடவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய படங்களை இயக்கிய அட்லியின் தயாரிப்பில் முதன்முதலாக உருவாகிவரும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இப்படத்தை ஹைக் என்பவர் இயக்கி வருகிறார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை மே 19-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் 24-ந் தேதி வெளியிடவுள்ளனர். இந்த பாடல்களையும் டிரைலரையும் நடிகர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளார்.



    திகில் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு கோடை விருந்தாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்தை ‘ஏ பார் ஆப்பிள்’ நிறுவனத்தின் சார்பாக அட்லி தயாரிக்க, பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.
    மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவிடம் இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுக்கவேண்டும் என்று விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

    சென்னை, ஏப். 23-

    மத்திய மந்திரி வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அவரை நடிகர் கமல் ஹாசன், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இதில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், நடிகர் கார்த்தி, டைரக்டர் பிரியதர்‌ஷன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    அப்போது நடிகர் விஷால் வெங்கையாநாயுடுவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், திரைப்படங்கள் திரைக்க வருவதற்கு முன்னரே இணைய தளங்களில் வெளிவருவதால் தயாரிப் பாளர்கள் மிகவும் பாதிப் படைகிறார்கள். தயாரிப் பாளர்கள் வருமானம் ஈட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முன் கூட்டியே இணைய தளங்களில் திரைப்படங்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.


    இணைய தளங்களில் திரைப்படங்கள் முன் கூட்டியே வெளியாவதை தடுப்பது பற்றி தகவல் தொழில் நுட்பத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து அதற்கான வழிமுறைகள் ஆராயப்படும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப் பால் பிராந்திய மொழி திரைப்படங்களுக்கு ஏற் படும் பாதிப்புகள் பற்றி விவாதிக்க மும்பை மற்றும் தென் மாநில சினிமா துறை பிரதிநிதிகளை அழைத்து நிதி மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து விவாதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சினிமாவில் சென்சார் கூடாது என்ற கருத்தும் உள்ளது. அப்படியானால் சினிமாவில் கட்டுக்கோப்பு இல்லாமல் ஆகிவிடும் எனவே அதற்கான மாற்று வழிகள் பற்றி பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக முட்கல் கமிட்டி பரிந்துரைகள் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் வெளியே வந்த நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது-

    திருட்டு வீடியோ, இணைய தளங்களில் சினிமாக்கள் வெளிவருவதை தடுப்பது பற்றி மத்திய மந்திரியிடம் கூறினோம். அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    திருட்டு வீடியோ பிரச்சினை தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பிரச்சினை. தமிழக திரைப்படத்துறை வளர்ச்சிக்கான சில கோரிக் கைகளையும் முன்வைத் துள்ளோம். அவற்றை நிறைவேற்றி தருவதாக கூறி இருக்கிறார்.

    செவாலியே விருது பெற்ற கமலஹாசனக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தவும் வலியுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் அடுத்ததாக ‘மதுர வீரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’ என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து  ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், சண்முகபாண்டியன் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.முத்தையா இயக்கவிருக்கிறார். இவர் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ‘மதுர வீரன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.



    இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்திற்கு கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    சமூக விரோதிகளாக மாறும் இளைஞர்கள் வாழ்க்கையை சொல்லும் ‘பிச்சுவா கத்தி’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் படம் ‘பிச்சுவா கத்தி’.

    இதில் இனிகோ பிரபாகரன், செங்குட்டுவன், ஸ்ரீபிரியங்கா, அனிஷா, யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், காளிவெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இசை-என். ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு- கே.ஜி. வெங்கடேஷ், எடிட்டிங்- எஸ்.பி. ராஜசேதுபதி, பாடல்கள்- யுகபாரதி, ஸ்டண்ட்- ஹரிதினேஷ், ‘சுப்ரிம்’சுந்தர், தயாரிப்பு- சி.மாதையன், இயக் கம்- ஐயப்பன்,



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    கிராமத்தில் மகிழ்ச்சி யாக சுற்றித்திரியும் 3 இளை ஞர்கள் விளையாட்டாக ஒரு தவறு செய்கின்றனர். அதற்கான தண்ட னையை அனுபவிக்க காவல் நிலை யம் செல்கின்றனர். காவல் நிலையத்திலுள்ள அதிகாரி இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்கிறார். இவர்கள் மறுக்கவே, அவர் மிரட்டுகிறார். இதனால் தங்களை காப்பாற்றிக் கொள்ள கெட்ட வழியில் ஈடுபட்டு பணத்தை தருகின்றனர்.

    ருசி கண்ட பூனைப்போல தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளாகவே மாறிப்போகின்றனர்.

    இறுதியில் அவர்கள் வாழ்க்கை மீண்டதா? இவர்களின் வாழ்வை திசை திருப்பிய அந்த அதிகாரி என்னவானார்? என்பதையும், ஒரு சிறு தவறு அவர்களை எப்படி திசை மாற்றியது என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லி இருக்கிறோம்” என்றார். படப்பிடிப்பு கும்ப கோணம் பகுதியிலும் சென்னையிலும் நடந்தது.

    அட்லி இயக்கும் `விஜய் 61' படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல் வெளியீடு, படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முக்கிய தளங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர், நடிகையர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் முக்கியமான பல காட்சிகள்
    ஐரோப்பாவில் படமாக்கப்படவுள்ளன.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

     

    `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுவதால், இப்படத்திற்கு `மூன்று முகம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்ன? பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

    ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது உள்ளிட்ட தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் பிறந்தநதளான ஜுன் 22-ஆம் தேதி வெளியிட்டு, அவரது ரசிகர்களுக்கு விருந்து படைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.



    அதைத் தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படத்தை வருகிற அக்டோபர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாகவிருந்த ரஜினியின் `2.0' ஜனவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. எனவே `விஜய் 61' படம் தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

    "அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

    இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

    தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

    அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

    எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

    1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

    அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

    அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

    பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

    எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

    நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

    பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

    இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

    அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

    என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

    இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

    அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.

    விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, அன்றையதினம் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.
    வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெறு வரும் இப்போராட்டத்திற்கு, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25ம் தேதி (செவ்வாய்கிழமை) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதேபோல் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.


    இந்நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் பங்கேற்கிறது. தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
    உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தின் இயக்குனரை ஓமன் நாட்டு மந்திரி பாராட்டியுள்ளார். அது என்னவென்பதை பார்ப்போம்...
    லைகா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு ஓமன் நாட்டில் நடந்து வருகிறது. கவுரவ் நாராயணன் இதை இயக்கி வருகிறார்.

    தங்கள் நாட்டில் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்த ஓமன் நாட்டின் தகவல் துறை மந்திரி மர்வான் யூசுப், கெளரவ் நாராயணனை சந்தித்தார். அப்போது அங்கு படமான பாடல் காட்சிகளை போட்டுக்காட்டினர்.

    அதை பார்த்த ஓமன் மந்திரி மர்வான் யூசுப், இயக்குனரையும் படக்குழுவினரையும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
    அறம் படத்துக்காக ஹாலிவுட் இசைகுழுவுடன் ஜிப்ரான் இணைந்து இசை வேலைகளை தொடங்குகிறார். இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    நயன்தாரா நடிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ஒரு புதிய யுக்தியாக இந்த படத்தின் பின்னணி இசையமைப்பிற்காக, ஒரு முன்னணி இசை நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.

    இதன் மூலம் ‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’, ‘ஹரி பாட்டர்’, ‘கேம் ஆம் தோரோன்ஸ்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பின்னணி இசை அமைத்த தி பி.கே.எப் பிரேக் பில்ஹார்மோனியா ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் இணைந்து ‘அறம்’ படத்திற்கான இசை வேலைகளை தொடங்குகிறார்.

    “ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    பெரிய போராட்டத்தை சந்தித்த பிறகுதான் நடிகை ஆனேன் என்று தப்புதண்டா படத்தின் கதாநாயகி ஸ்வேதா கய் கூறினார்.

    புதிய இயக்குனர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள படம் ‘தப்புதண்டா’. சத்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்வேதா கய். ‘இது என்ன மாயம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார். இது பற்றி கூறிய அவர்...

    “என் பெயர் ஸ்வேதா கய் என்று இருப்பதால் நான் வட இந்திய பெண் என்று நினைக்கிறார்கள். நான் தமிழ் பெண். எனது பெயருக்குப்பின்னால், எனது அம்மா காயத்திரியின் முதல் இரண்டு எழுத்தை சேர்த்து ஸ்வேதா கய் என்று வைத்து இருக்கிறேன்.

    இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு எளிதாக கிடைத்து விடவில்லை. இந்த படத்தின் நாயகி தேர்வுக்கு 60 பெண்கள் வந்து இருந்தனர். பல கோணங்களில் நடித்துக்காட்ட சொன்னார்கள். நீண்ட வசனத்தை கொடுத்து பேச சொன்னார்கள். இதில், எல்லாம் ‘ஓகே’ ஆனபிறகு, நான் ஒல்லியாக இருப்பதாக சொன்னார்கள். இதனால் நான் செலக்ட் ஆவேனா என்று பயந்து கொண்டே இருந்தேன்.

    பெரிய போராட்டத்தை சந்தித்த பிறகுதான் இதில் நடிக்க தேர்வு ஆனேன். அப்படி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, இதில் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறேன். நிச்சயம் இந்த படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்” என்றார்.

    பாகுபலி படத்தில் நடித்த பிறகு ஒரு நடிகையாக என் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது என்று நடிகை தமன்னா கூறினார்.

    ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களில் நடித்துள்ள தமன்னா அந்த அனுபவங்களை இப்படி சொல்கிறார்....

    “ ‘பாகுபலி’ படத்தில் நடித்த பிறகு ஒரு நடிகையாக என் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. எந்த சவாலான காட்சிகளிலும் என்னால் நடிக்க முடியும் என்ற துணிச்சலை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு எனது ‘இமேஜ்’ முழுவதும் மாறிவிட்டது.

    இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் ஒரு கனவு போல இருக்கிறது. சண்டை காட்சிகளில் நடித்ததை மறக்கவே முடியாது. இன்னும் எத்தனை படங்களில் நடித்தாலும், ‘பாகுபலி’யில் நடித்தது என் மனதைவிட்டு அகலாது. திரை உலகில் எனக்கு ஒரு வித்தியாசமான பாதையை வகுத்துக்கொடுத்த இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

    ‘பாகுபலி-2’-ல் முதல் பாகத்தில் நடித்த அதே வேடம் தான் என்றாலும், இதில் அழுத்தமான கதை இருக்கிறது. ஒரு நடிகை என்பதையும் தாண்டி குதிரை ஏற்றம், சண்டை காட்சிகளில் நடித்தேன். இதற்காக அவற்றை முறைப்படி பயின்றேன்.


    அனுஷ்கா, பிரபாஸ், சத்யராஜ் ஆகியோருடன் அதிக காட்சிகளில் நடித்திருக்கிறேன். எல்லோரும் என் நண்பர்கள். இந்த படத்தில் நடித்ததன் மூலம் என் சினிமா கனவு நிறைவேறிவிட்டதாக நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு படம் எடுப்பது சிரமம். இதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். அதை சரியாக பயன்படுத்தி இருப்பதாக நினைக்கிறேன். ‘பாகுபலி’ படத்துடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது”.

    கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்த சத்யராஜுக்கு, கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்...
    ‘பாகுபலி-2’ திரைப்படம் வருகிற 28-ந்தேதி 'ரிலீஸ்' ஆகிறது.

    9 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், ‘பாகுபலி-2’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று சில கன்னட அமைப்புகள் அறிவித்தன.

    இதையடுத்து சத்யராஜ் 9 வருடங்களுக்கு முன்பு நான் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக நடந்த கண்டன கூட்டத்தில் பேசினேன். அந்த கருத்துக்கள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ‘பாகுபலி-2’ படத்தை திரையிட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வீடியோ பேச்சு மூலம் விளக்கம் அளித்து இருந்தார்.

    அதில், ஒரு நடிகனாக இருப்பதைவிட, எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும்தான் எனக்கு பெருமை மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார்.


    இதற்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    இக்கட்டான சூழ்நிலையிலும் பகுத்தறிவை பின்பற்றி வருவதாக சத்யராஜ் கூறி உள்ளார்.. மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன். சத்யராஜுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

    இதற்கு பதில் அளித்துள்ள சத்யராஜ், 'கமலின் பாராட்டுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
    ×