என் மலர்
ராசிபலன்

weekly rasipalan 31-8-2025 to 6-9-2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- கடகம் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும் வாரம்.
- கன்னி வீண் விரயங்களை தவிர்க்க வேண்டிய வாரம்.
மேஷம்
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு 5-ல் சூரியன், புதன், கேது சேர்க்கை உள்ளது. இதனால் சுக சவுகரியங்கள் அதிகரிக்கும். வாழ்நாள் எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும். எந்தச் செயலையும் திறம்படச் செய்யும் செயல்திறன் கூடும். உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களை நோக்கி பயணிப்பீர்கள்.
விதவிதமான பொன், பொருள், ஆபரணங்கள் கிடைக்கும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். புகழ், அந்தஸ்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் தேடி வரும். சிலருக்குப் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும்.
கண் அறுவை சிகிச்சை வெற்றியாகும். கணவன்- மனைவி நெருக்கம் அதிகரிக்கும். 1.9.2025 அன்று இரவு 7.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் தொலை தூரப் பயணங்களை தவிர்க்கவும். குடும்ப பிரச்சினையை வெளி நபர்களுடன் பகிரக் கூடாது. பிரதோஷ காலங்களில் நந்தி பகவானுக்கு பச்சரிசி மாவினால் அர்ச்சனை செய்ய கடன் தொல்லைகள் குறையத்து வங்கும்.
ரிஷபம்
எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் நிறைவேறும் வாரம். ராசிக்கு பாக்கிய அதிபதி சனியின் பார்வை உள்ளது. 12 ராசிகளில் ரிஷப ராசிக்கு காலமும், நேரமும் மிகச் சாதகமாக உள்ளது. சிறு சிறு மனசஞ்சலங்கள் இருந்தாலும் இலக்கை அடைவீர்கள். பல வழிகளிலும் பண வரவு உண்டாகும். லாபத்தால் வசதிகள் பெருகும். பணம் கொடுக்கல், வாங்கல் சீராகும். புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
சொந்த தொழில் செய்யும் அமைப்பு உருவாகும். சகோதர, சகோதரி ஒற்றுமை பலப்படும். மனச் சங்கடம் மறையும். பூமி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பருவ மழை பொழியும் காலம் என்பதால் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.
1.9.2025 அன்று இரவு 7.55 முதல் 4.9.2025 அன்று மாலை 5.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் சிலரின் உடல் நலிவுறும். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதால் ஆனந்தம் கூடும்.
மிதுனம்
மனதில் அமைதி நிலவும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறது. வைராக்கியம், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு சாதனை புரிவீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
புதிய நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். பெண்களின் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுத் தரும். சுற்றத்தார் மூலமாக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை அணிகலன்கள் கிடைக்கும். சுப விசேஷங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள்.
4.9.2025 அன்று மாலை 5.21 முதல் 6.9.2025 அன்று பகல் 11.21 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் போட்டி பந்தயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சாமர்த்தியமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடைய முடியும். பிரதோஷ நாட்களில் நந்திகேஸ்வரருக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட வியாபாரம் விருத்தியாகும்.
கடகம்
அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும் வாரம். ராசியில் தனித்த சுக்கிரன் உள்ளார். அழகு ஆடம்பரத்தின் மீது ஆர்வம் கூடும். குடும்ப உறவுகள் வருகையால் சந்தோஷமும், செலவும் பெருகும். தாய், தந்தை மற்றும் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.
கூட்டாளிகள் மற்றும் உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும். நண்பர்களால் திடீர் லாபங்கள் உண்டாகும். கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் கைகூடும். வராக்கடன்கள் வசூலாகும். தடைபட்ட காதல் திருமணம் சுபமாக நடந்தேறும். துக்கத்தால் தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.
பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் சுபசெலவுகள் நடக்கும் 6.9.2025 அன்று பகல் 11.21 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலருக்கு அதிக கண்திருஷ்டியால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும். பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் மன சஞ்சலம் அகலும்.
சிம்மம்
சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசியில் சூரியன், புதன், கேது சேர்க்கை உள்ளது. சூரியன் கேது சேர்க்கை கிரகண தோஷ அமைப்பாகும். 7.9.2025 அன்று சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் கிரகணதோஷ பாதிப்பு உண்டு. செலவுகளும், விரயங்களும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கும். வந்த பணம் அடுத்த நிமிடமே செலவாகலாம்.
இந்த காலகட்டத்தில் ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது ஆகியவைகளை தவிர்க்க எந்த பாதிப்பும் ஏற்படாது. வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் அரசியல்வாதிகள் மவுனமாக இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆளுமை மேலோங்கும். பெரிய தொகையை கடனாக கொடுக்கும் முன்பு பலமுறை யோசிக்க வேண்டும்.
கிரகணத்தன்று பகல் பொழுதில் அரை வயிறு சாப்பிட்டு சிவ வழிபாடு செய்வதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். பிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபட்டால் உடல் நலம் கூடும். நீண்டகால நோய் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.
கன்னி
வீண் விரயங்களை தவிர்க்க வேண்டிய வாரம். ராசிக்கு சனி, செவ்வாய் சம்பந்தம் உள்ளது. ராசி அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் விரைய அதிபதி சூரியனுடன் இணைந்துள்ளார். பணிச்சுமை அதிகரிக்கும். தாய்மாமாவிற்கும், தம்பிக்கும் ஏற்பட்ட மோதலில் பழிச் சொல் உங்கள் பக்கம் திரும்பும். அறுவை சிகிச்சை செய்தவர்கள் குணமடைந்து இயல்பு நிலை திரும்புவார்கள்.
வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு உண்டு. பதவி உயர்வின் மூலம் பல நல்ல பயன்களை அடைவீர்கள். விரும்பிய கடன் தொகை கிடைக்கும் புதிய வீடு வாங்கலாம், அல்லது மாறலாம். வீடு, வாகனம் தொடர்பான கடன் முயற்சிகள் சாதகமாகும்.
வீட்டில் சுபமங்கள நிகழ்வுகள் விமரிசையாக நடக்கும். அழுகை உனது வாழ்க்கை அல்ல. துணிச்சலே உனது சக்தி என்று உணர்ந்து செயல்பட்டால் அச்சம் சாம்பலாகும். பிரதோஷ நாட்களில் நந்திகேஸ்வரருக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபட்டால் ஆன்ம பலம் பெருகும். துன்பங்கள் நீங்கி நல்ல ஆற்றல்கள் பெருகும்.
துலாம்
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உயரிய கவுரவத்தை அடையும் நேரம். நடக்குமா என்ற நிலையில் இருந்த காரியத்தை மன உறுதியுடன் தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.
சிலருக்குப் புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். புதிய தொழில் நண்பர்கள் சேர்க்கை, தொழில் லாபம் ஆகியவை ஏற்படும். அரசியல் அரசு சார்ந்த தொழில், அரசுப் பணியாளர்களுக்கு பண மழை பொழியும். வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள். புத்திர பாக்கியம். வீடு வாகன யோகம் என சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்து கொள்வார்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பெண்கள் யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது. பிரதோஷ நாட்களில் சந்தனம் அபிஷேகம் செய்து வழிபடுவதால் மனஅமைதி கூடும். பொருளாதார மேன்மை உண்டாகும்.
விருச்சிகம்
லாபகரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் விலகும். மலை போல வந்த துயரம் பனி போல் விலகும். தொழில், வியாபார நெருக்கடி நிலை மாறும். பூர்வீகச் சொத்தைப் பிரிப்பதில் தாய் மற்றும் தந்தை சகோதரருக்கு சாதகமாக செயல்படுவார்கள். செல்வச் செழிப்பு கூடும். எதிர் கால வாழ்வா தாரத்திற்குத் தேவையான சேமிப்பை உயர்த்த ஏற்ற நேரம்.
அரசின் ஒப்பந்ததாரர்கள், குத்தகை தாரர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். வீடு, மனையில் புதிய முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பாளர்களின் நட்பு கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் ஓடி வரும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் நிவர்த்தியாகி திருமண வாய்ப்பு தேடி வரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைத்தியச் செலவு குறையும். பிரதோஷ நாட்களில் நந்திய பகவானுக்கு பஞ்சா மிர்தம் அபிஷேகம் செய்து வழிபட்டால் பலவிதமான செல்வமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.
தனுசு
பாக்கிய பலன்கள் அதிகரிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் புதன் கேது சேர்க்கை ஏற்படுகிறது. 7.9.2025 அன்று சந்திர கிரகணம் ஏற்படும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சினைகள் தோன்றும். உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது.
கிரக நிலைகள் சற்று சாதகமற்று இருந்தாலும் ஒரு கதவை அடைத்தாலும் மறுகதவு திறந்து விடுபவர்கள் தான் நவகிரகங்கள். எனவே நம்பிக்கை மிக முக்கியம். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞான தன்மை அதிகரிக்கும். சுய ஜாதக ரீதியாக கடுமையான பித்ரு, மாத்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பரிகார சாந்தி பூஜைகள் செய்தால் ஜாதக ரீதியான பாதிப்புகள் அகலும்.
தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் நடைபெறும். திருமணம் குழந்தை பேறு தொழில் உத்தியோகரீதியான இடர்கள் அகலும். பஞ்ச கவ்யம் எனும் பசுஞ்சாணம், கோமியம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து அபிஷேக ஆராதனை செய்து நந்தி. சிவனை பூஜித்தால் தடைப்பட்ட அனைத்து இன்பங்களும் தேடி வரும்.
மகரம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். அஷ்டம ஸ்தானத்தில் கிரகணச் சேர்க்கை ஏற்படுகிறது. பிறர் பிரச்சினைக்காக வீண் பழிகளைச் சுமக்க வேண்டிய நேரம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செய்வதை தவிர்க்கவும். சேமிப்பு கரையும். ஆரோக்கிய தொல்லை ஏற்படும். உரிய மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்வது நல்லது.
கடின வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். நிதானமாக பேசினால் நன்மை உண்டு. பணமுடைய மற்றும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிலருக்கு அதிக செலவு காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு மறுமணத்திற்கு வரன் அமையும். பிரதோஷ நாட்களில் கரும்புச்சாறு அபிஷேகம் செய்து நந்தி பகவானை வழிபட்டால் மனதிற்கு மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் அதிகமாகும்.
கும்பம்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம். ராசியில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்பட போகிறது. இது கிரகண தோஷ அமைப்பாகும். 7.9.2025 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் தோன்றுவதால் மனதில் வெறுமை பய உணர்வு இருக்கும். அஜீரண கோளாறு உண்டாகும். அடுத்த சில நாட்களுக்கு கடன் நெருக்கடி, நோய் தாக்கம், எதிரி தொல்லைகள் கூடும்.
கணவன் மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை இருக்கும் மாணவர்கள் பாடங்களை அக்கறையுடன் கவனத்துடன் படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். திருமண விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக நடக்கும். எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. வேலை மாற்றம் செய்யக்கூடாது.
பெண்கள் மாங்கல்யம் மாற்றுவதை தவிர்க்கவும். மிகுதியான கோபம், பிடிவாதத்தை தவிர்த்தால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். எந்த புதிய முயற்சியாக இருந்தாலும் 15 நாட்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது. பிரதோஷ நாட்களில் வாசனைத் திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்து நந்தி பகவானை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.
மீனம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு செவ்வாயின் சம சப்தம பார்வை உள்ளது. இதில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உள்ளது. தொழில் உத்தியோக ரீதியான அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு நிரந்தர பணி கிடைக்கும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பாதிகப்படலாம்.
சிலர் பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவர். சிலர் மனதிற்கு பிடிக்காத வேலையை நிராகரித்து புதிய பணிக்கு முயற்சி செய்யலாம். கடந்த காலத்தில் வாங்கிய நிலத்தை பத்திரப் பதிவு செய்வீர்கள்.சிலர் நீண்ட காலமாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்குவார்கள். சிலருக்கு புதிய வீடு கட்டும் ஆர்வம் உதயமாகும்.
உடன் பிறந்த சகோதர சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக் கசப்பு உருவாகும். பிரதோஷ நாட்களில் சுத்தமான நல்லெண்ணெயில் நந்திக்கும் சிவனுக்கும் எண்ணெய் காப்பு செய்து வழிபட சுய ஜாதகரீதியான அனைத்து விதமான பாதிப்புகளும் அகலும்.






