என் மலர்
ராசிபலன்

weekly rasipalan 21.9.2025 to 27.9.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
- ரிஷபம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம்.
- மிதுனம் அதிர்ஷ்டகரமான வாரம்.
மேஷம்
துணிச்சலும் தைரியமும் மிகுந்த வாரம். 2,7-ம் அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் இணைகிறார். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகலாம். பூர்வீகம் சென்று வருவதில் சற்று சிரமம் இருக்கும். பணம் பொருள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அறிமுகம் அல்லாத நபர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது அதேபோல் உங்களுக்கு உதவி செய்வதாக கூறும் அன்னியர்களை நம்ப வேண்டாம். எது எப்படி இருந்தாலும் ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் எந்த நிலையிலும் தைரியம் குறையாது.
26.9.2025 அன்று மாலை 3.24 மணி முதல் 29.9.2025 அன்று அதிகாலை 3.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதார முன்னேற்றத்தில் தடை உருவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் அம்மன் கோவில்களுக்கு குங்குமம் வாங்கித் தருவதால் மங்களம் உண்டாகும்.
ரிஷபம்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் கேதுவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். சோர்வான பலவீனமான மனநிலையில் இருப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பாதிப்புகள் வரலாம். சொத்துக்கள் விஷயத்தில் மன உளைச்சல் ஏற்படலாம். சிலர் சொத்துக்களின் பராமரிப்பு பணியில் ஈடுபடலாம்.
தொழில் மூலம் நல்ல வருமானம் வரும். தீபாவளிக்கு சற்றேறக் குறைய ஒரு மாதம் மட்டும் இருப்பதால் நம்பகமற்ற விளம்பரங்களை நம்பி பொருளுக்கு பணம் கட்டி ஏமாறலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். மாணவர்கள் நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வது அவசியம்.
சிலருக்கு தீபாவளி முடிந்தவுடன் வேலை மாற்றம் செய்யும் எண்ணம் வரலாம். வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடு வந்தாலும் அது கானல் நீராக மறைந்துவிடும். நவராத்திரி காலங்களில் சுமங்கலிப் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்க மங்களம் பெருகும்.
மிதுனம்
அதிர்ஷ்டகரமான வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி புதனுக்கு சனிப் பார்வை உள்ளது. ராசி அதிபதி புதன் பாக்கியாதிபதி சனியின் பார்வை பெறுவது மிக உன்னதமான அமைப்பாகும். உங்கள் செயல்பாட்டில் இருந்த தடுமாற்றம் குழப்பங்கள் மறையும். சனிபகவான் மிதுனத்திற்கு அஷ்ட மாதிபதியாகவும் இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம்.
இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபடு வீர்கள். எதிர்பார்த்த தொழில் வாய்ப்புகள் தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோக சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்கால இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். குடும்பத் தேவைக்காக சில ஆடம்பரப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு திருமண முயற்சிகள் வெற்றி தரும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். நவராத்திரி காலங்களில் பச்சைப்பயிறு சுண்டல் தானம் வழங்கவும்.
கடகம்
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சந்திரன் 2,3,4,5-ம் இடங்களில் சஞ்சரிப்பது கடக ராசிக்கு சுபத்துவத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். உடல் மனம் ஆன்மா இவை மூன்றும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். உள்ளமும் உடலும் ஒன்றுபடுவதால் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கோப உணர்வு குறையும் வெற்றிப் பாதையை நோக்கி பயணித்து இலக்கை அடைவீர்கள்.
புதிய நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் அனுகூலமான சூழ்நிலைகள் நிலவும். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனை சனி பகவான் பார்ப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. திருமணத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும்.
மறுமணம் முயற்சிகள் பலன் தரும். விட்டுச்சென்ற காதல் மீண்டும் தொடரும். புதிய சொத்துக்கள் சேரும். ஆன்மீக நாட்டம் கூடும். குழந்தைகளால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நவராத்திரி நாட்களில் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.
சிம்மம்
கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். இது கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகரிக்கும். விண்ணப்பித்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைத்துவிடும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
விடா முயற்சியும், உழைப்பும் சிந்திக்கும் திறனும் உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தந்தை வழி உறவுகளை அனுசரித்து சென்றால் இன்னல்கள் குறையும். குடும்ப வழக்குகளை ஒத்தி வைப்பதால் நிம்மதி அதிகமாகும். அதிக பொறுப்புகள், பணிச்சுமையால் சில நேரங்களில் சோர்வாகவும், விரக்தியுடனும் இருப்பீர்கள்.
பதவி உயர்வு ஊதிய உயர்வு பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். மாணவர்கள் கவனத்தை கல்வியில் செலுத்தினால் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியும். நவராத்திரி காலங்களில் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை தானம் வழங்க தனவரவு இரட்டிப்பாகும்.
கன்னி
தொழில் அபிவிருத்தி ஏற்படும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று உள்ளார். இவரே உங்களுக்கு தொழில் ஸ்தான அதிபதியாகவும் இருப்பதால் தொழில் ரீதியான முன்னேற்றம் அபிவிருத்தி உண்டாகும். முதல் தொழிலில் தோல்வியுற்றவர்கள் இரண்டாவது தொழிலை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் என வாழ்க்கை ஒளிமயமாக மாறப் போகிறது.
பிற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய வழி தென்பட போகிறது. மனரீதியாக உடல்ரீதியாக அனுபவித்த வேதனைகள் விலகிச் செல்லும். வாழ்க்கைத் துணையின் உறவுகள் மூலமாக ஏற்பட்ட பிரச்சினைகள் குறையத் துவங்கும். நிதிநிலை, குடும்ப சூழ்நிலை, உடல் ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் உங்களுக்கு சாதகமாக உள்ளது.
புதிய வாகனம் வாங்குதல் வீடு கட்டுதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். மாணவர்கள் தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி கற்பதன் மூலம் மன அமைதியுடன் படிக்க முடியும். நவராத்திரி காலங்களில் அம்மன் கோவில்களில் விளக்கேற்றுவதால் உயர்வு உண்டாகும்.
துலாம்
எதிர்ப்புகள் அகலும் வாரம். ராசியில் தனாதிபதி செவ்வாய் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். பணம் குடும்பம் பற்றிய எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். பொருள் சார்ந்த விஷயங்களில் கவனம் கூடும். விரும்பிய இலக்கை அடைய திட்டமிடுவீர்கள். உங்களை சூழ்ந்து நின்ற வெறுமை எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகள் குறையும். வருமானம் உயரும்.
பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் வெற்றி பெறும். அன்புடன் பேசினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அற்புதமான இந்த காலகட்டங்களில் உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டால் வெகு விரைவில் வெற்றி கனியை எட்டிப் பறிப்பீர்கள். துலாம் ராசிக்கு திருமண தடைகள் விலகி நல்ல பலன்கள் வந்து சேரும்.
மன அழுத்தத்தால் ஏற்பட்ட தூக்கமின்மை கோளாறு சீராகும். புதிய எதிர்பாலின நட்புகள் உருவாகும். புகுந்த வீட்டு உறவுகளால் ஏற்பட்ட சர்ச்சைகள் முடிவிற்கு வரும். நவராத்திரி காலங்களில் சக்தி வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவதால் வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
வளமான வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை சனி பகவானின் பார்வையில் ஏற்பட்டுள்ளது. லாபாதிபதி புதனும் தொழில் ஸ்தான அதிபதி சூரியனும் இணைவதால் செல்வாக்கு அதிகரிக்கும். இழு பறியாகக் கிடந்த அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். பிறர் வியக்கும் வண்ணம் உங்கள் வாழ்க்கையில் வளம் உண்டாகும்.
பேச்சிலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் தெளிவு இருக்கும். சிறிய முதலீடுகள் பெரிய லாபத்தை பெற்று தரும். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் சீராகும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு, வாகனம், ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். உங்களின் குடும்ப, தனிப்பட்ட விஷயங்களை அறிமுகம் இல்லாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் கல்வியில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். கை கால் மூட்டு வலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். கட்சிக்காக உழைத்து சளைத்த அரசியல்வாதிகள் பிரபலமாகும் நேரமாகும். நவராத்திரி காலங்களில் துர்க்கை காளி வழிபாடு செய்வதால் வெற்றி நடை போட முடியும்.
தனுசு
செயல்களில் வெற்றி கிடைக்கும். பாக்கியாதிபதி சூரியன் கர்மஸ்தான அதிபதி புதனுடன் தொழில் ஸ்தானத்தில் இணைவது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகும். இதுவரை முடங்கி கிடந்த அனைத்து திறமையும் வெளிப்படும். மனமும் உடலும் ஒன்றுபட்டு செயல்வேகம் கூடும். உபரி லாபத்தை சொத்துக்களில் முதலீடு செய்யும் எண்ணம் உருவாகும்.
திருமணத்தடை அகலும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் அகலும். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பெண்களுக்கு தாய் வழி சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
இதுவரை புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகியவருக்கு குலதெய்வ அருளால் இயற்கையாகவே குழந்தை பிறக்கும். நவராத்திரி காலங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கவும்.
மகரம்
பெற்றோர்களின் ஆசிர்வாதம் நிறைந்த வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாயின் நல் ஆசியும், தாய் வழிச் சொத்துக்களும் கிடைக்கும். தீபாவளிக்கு எக்ஸ்சேஞ்ச் ஆபரில் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்கள் வாங்க திட்டமிடுவீர்கள்.
மனைவி வழிச் சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்துக்கள் மாறும். படித்த இளைஞர்களுக்கு திறமைக்கு தகுந்த வேலை கிடைக்கும். புதிய தொழில், உத்தியோக முயற்சிகள் வெற்றி உண்டாக்கும். கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் குறையத் தொடங்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
நீண்ட நாள் நோய் தாக்கம் மாற்று முறை வைத்தியத்தில் சீராகும். மறைமுகத் தொந்தரவு கொடுத்தவர்கள் விலகுவார்கள். 21.9.2025 அன்று மாலை 3.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் கோவில்களுக்கு தேவையான மலர் தானம் வழங்க குடும்ப குழப்பங்கள் சீராகும்.
கும்பம்
செல்வநிலை உயரும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சுக்கிரனின் பார்வை உள்ளது.இந்த கிரகங்களின் பார்வை ராசியில் உள்ள ராகுவால் ஏற்பட்ட எதிர்மறை பாதிப்புகளை குறைக்கும். நடைமுறை வாழ்வில் நிலவிய சிக்கல்களை சரி செய்வீர்கள். நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். அவ்வப்போது சிறிய பிரச்சினைகள் இருந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டீர்கள்.
பொன் பொருள் பூமி சேரும் வாய்ப்புகள் உள்ளது. கோச்சார ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து திருமணம் நடக்கக்கூடிய சூழல் உருவாகும். இறைவழிபாட்டில் ஆர்வம் கூடும். குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி முயற்சியில் முன்னேற்றங்கள் உண்டாகும். தொழிலுக்கு வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும்.
21.9.2025 அன்று மாலை 3.58 மணி முதல் 24.9.2025 அன்று அதிகாலை 2.56 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்படுத்த முடியாத திடீர் முடிவுகளால் மன வருத்தங்கள் தோன்றி மறையும். கணவன் மனைவிக்கு சிறு சிறு மனச் சங்கடங்கள் உண்டாகும். நவராத்திரி காலங்களில் ஆதிபராசக்தியை வழிபட்டால் சுய ஜாதகத்தில் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அகலும்.
மீனம்
நீண்ட கால ஆசைகள், கனவுகள் நிறைவேறும் வாரம். ராசியில் உள்ள சனி பகவானுக்கு சூரியன் மற்றும் புதனின் பார்வை உள்ளது. அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும். தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நிர்வாகத்திறனும் பொறுப்புகளும் கூடும் எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். வரவேண்டிய கமிஷன் தொகைகள் வந்து சேரும் தந்தை வழி உறவுகளை பகைக்க கூடாது.
ஜாமின் மற்றும் கடன் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். சனி பகவானின் வக்கிர நிவர்த்தி வரை வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். சிலர் புதியதாக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கலாம். குடும்ப முக்கிய பிரச்சினைக்காக வழக்கறிஞரின் ஆலோசனையை நாடுவீர்கள்.
திருமணம் மற்றும் குழந்தை பேரில் நிலவிய தடைகள் அகலும். 24.9.2025 அன்று அதிகாலை 2.56 மணி முதல் 26.9.2025 அன்று மாலை 3.24 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தின் சின்னச் சின்ன பிரச்சினைகளை லேசாக எடுத்து கொள்ள வேண்டும். வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சிலருக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நவராத்திரி காலங்களில் ஸ்ரீ சக்கர வழிபாடு செய்வதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.






