என் மலர்
ராசிபலன்

2025 மார்கழி மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
- திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
- பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்ம ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு யோகாதிபதி செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். அதே நேரம் ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால், தொழிலில் குறுக்கீடுகள் வந்து கொண்டுதான் இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள், அதை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை மாற, சர்ப்ப கிரகங்களுக்குரிய தெய்வங்களை யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடுவது நல்லது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குருபகவான் வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் யாவும் புனிதமடைந்து நற்பலன் தரும். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடியும். ஆடம்பரச் செலவுகளால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு நல்ல வரன் வந்துசேரும்.
இதுவரை தடைப்பட்ட சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு, அதை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். இதுவரை பகையாக இருந்த உறவினர்கள், உங்களைத் தேடி வந்து பாசம் காட்டுவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மகத்தான பொறுப்புகள் கிடைக்கும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிபவர்களுக்கு அங்கு 'குடியுரிமை கிடைக்கவில்லையே' என்ற கவலை அகலும். இடம் வாங்கும் யோகம் உண்டு. புதிய கூட்டாளிகள் மூலம் தொழில் முன்னேற்றம் காணும் நேரம் இது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும்போது, பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அகலும். வாழ்க்கையில் புதிய பாதை புலப்படும். முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல காரியங்கள் நடைபெறும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார்். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய் என்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தங்களின் வியாபார தலத்தை வேறு ஒரு புதிய இடத்திற்கு மாற்ற முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிவகுத்துக் கொடுப்பர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 18, 19, 29, 30, ஜனவரி: 3, 4, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
கன்னி ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தனாதிபதி சுக்ரனும் இணைந்து சஞ்சரிப்பதால், நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். வருமானம் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். உடன் இருப்பவர்களால் நன்மை கிடைக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். தொழில் முன்னேற்றம் ஏற்படும் மாதம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பதியும் ராசிகள் புனிதமடைந்து நற்பலன்களை வழங்கும். அந்த அடிப்படையில் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்ெபாழுது துரிதமாக நடைபெறும். பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்த உங்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகவும், சிறப்பாகவும் இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவீர்கள்.
சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இதுவரை ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் சுழன்று பணிபுரியும் சூழல் உருவாகும். வாசல் தேடி வரும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. உங்களுக்கு இடையூறாக இருந்த மேலதிகாரிகள் இப்பொழுது மாற்றப்படலாம். கேட்ட சலுகைகள் கிடைக்கும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 4-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல சந்தர்ப்பங்கள் பலவும் வரப்போகிறது. குறிப்பாக பணத்தேவை பூர்த்தியாகும். புதிய இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு அல்லது இருக்கும் வீட்டை விரிவு செய்யும் அமைப்பு உண்டு. தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும். மகிழ்ச்சிகரமான ஆன்மிகப் பயணங்கள் உண்டு.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் உச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். மேலும் தொழில் போட்டிகள் அதிகரிக்கும். உடல்நிலை பாதிப்பு காரணமாக ஒரு சில காரியங்களை தாமதமாகச் செய்ய நேரிடும். வாகனப் பழுதுகளால் மன வாட்டம் ஏற்படும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு. கலைஞர்களுக்குப் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு நிலையான வருமானம் உண்டு. பூமி யோகம் அமையும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 17, 20, 21, ஜனவரி: 1, 2, 5, 6, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
துலாம் ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி புதன் இணைந்திருக்கிறார். எனவே வருமானம் வந்தாலும் அதைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். 'சேமிக்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணம் கைகளில் புரளும் நேரத்தில் சுபச்செலவுகளைச் செய்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர் மாற்றம் பற்றியும், உத்தியோக மாற்றம் பற்றியும் நீங்கள் சிந்தித்தபடியே செயல்படுவீர்கள்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அவர் இப்பொழுது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக இருந்தாலும், அதன் பார்வைக்கு பலன் அதிகம். எனவே இதுவரை இருந்த இடா்பாடுகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே.. கொடுத்த கடனை வாங்க முடிவில்லையே..' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.
சகாய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் காரிய வெற்றியும், பணப் புழக்கமும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்தால் அதில் அனுகூலம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொடர்ச்சியாக வந்த கடன் சுமை குறைய, புதிய வழிபிறக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புதிய பொறுப்புகள் தேடிவரும். அதிகார அந்தஸ்திற்கு சிலர் உயர்த்தப்படுவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தானாக வரும் பதவிகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாசல் தேடி வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 17, 18, 19, 23, 24, ஜனவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
விருச்சிக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்த பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியன் இணைந்திருப்பதால் தொழில் முன்னேற்றம், வருமான உயர்வு வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும். மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சுபக் கிரகத்தின் பார்வை பதிவதால் சுபச் செய்திகள் வந்து சேரும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன- பஞ்சமாதிபதியானவர் குரு. அவர் அஷ்டமத்தில் சஞ்சரித்தாலும், அவரது பார்வை தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்தில் பதிகிறது. தன் வீட்டை, தானே பார்க்கும் குருவால் எண்ணற்ற நற்பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு கைகூடும். உறவினர் பகை அகலும். கொடுக்கல் - வாங்கல்களில் லாபம் உண்டு. குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்பதால் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த அடிப்படையில் குருவின் பரிபூரண பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் உடல்நலம் சீராகும். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு, அதிகார அந்தஸ்தைப் பெறும் யோகம் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குறிப்பாக புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம - விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப அமைதி கூடும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்க செலவிடுவீர்கள். மேலும் திருமண வயதடைந்த பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாங்கிய இடத்தை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகையைக் கொண்டு, நடக்கும் தொழிலை விரிவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வரும் வாய்ப்பு உண்டு.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் வலிமை அடைவதால் யோசிக்காது செய்த காரியங்களிலும் வெற்றி உண்டு. பூமி யோகமும், பிள்ளைகளின் வழியில் நல்ல காரியமும் நடைபெறும் சூழ்நிலையும் உருவாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்து மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு புகழும், புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு குடும்பப் பொறுப்பு கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் ஆதாயம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.






