டென்னிஸ்

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்- வர்வரா கிராச்சேவா காலிறுதிக்கு தகுதி

Published On 2022-09-16 11:41 GMT   |   Update On 2022-09-16 11:41 GMT
  • இரண்டாவது சுற்று ஆட்டத்தில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர்.
  • காலிறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர்.

சென்னை:

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டிஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர். இதில் கிராச்சேவா 6-1, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா), மெக்டா லினெட் (போலந்து) கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.

இன்று ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புசார்ட் (கனடா)-போடோரோஸ்கா (அர்ஜென்டினா) மோதுகிறார்கள். 6.15 மணிக்கு நடக்கும் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கிராச்சேவா (ரஷியா)-லின்டா ப்ருஹ்விர்டோவா (செக் குடியரசு) மோதுகிறார்கள்.

இரவு. 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மெக்டாலினெட் (போலந்து)-மரினோ (கனடா), இரவு 8.45 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஸ்வான் (இங்கிலாந்து)-நாவ் ஹிபினோ (ஜப்பான்) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

அனுபவம் வாய்ந்த வீராங்கனையான புசார்ட் அரை இறுதிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டையர் பிரிவில் இன்று நடக்கும் அரை இறுதி போட்டியில் புசார்ட் (கனடா)-விக்மேயர் (பெல்ஜியம்) ஜோடி, அன்னா பிஸிங்கோவா (ரஷியா)-டிசலமிட்ஜ் (ஜார்ஜியா) ஜோடி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

நேற்று நடந்த கால் இறுதியில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா தோல்வியை தழுவினர். இதன் மூலம் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் வெளியேறி விட்டனர்.

Tags:    

Similar News