null
ஐபோன் 15-இல் டைப் சி போர்ட் மூலம் அதிவேக சார்ஜிங் வசதி - லீக் ஆன புது தகவல்..!
- ஐபோன் 14 ப்ரோ மாடலில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் 15 மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும், இதன் டாப் எண்ட் மாடல்களில் அதிநவீன பிராசஸர், மேம்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா சார்ந்த புதிய அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஐரோப்பிய யூனியன் பிறப்பித்து இருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. டைப் சி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் 35 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் மாடல் முந்தைய வெர்ஷனை விட அதிவேக சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஐபோன் 14 ப்ரோ மாடலில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், ஐபோன் 14 மாடலில் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 35 வாட் பவர் அடாப்டரை அறிமுகம் செய்தது.
இதன் மூலம் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் 35 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டுமே பிரத்யேக அம்சமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.
Photo Courtesy: 9To5Mac