தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு வியர் 2.0 கொண்ட ஹூவாய் வாட்ச் 2: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

Published On 2017-01-26 12:35 GMT   |   Update On 2017-01-26 12:35 GMT
ஹூவாய் நிறுவனம் தனது புதிய வாட்ச் 2 சாதனத்தை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீஜிங்: 

ஹீவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் 2 சாதனம் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் இந்த சாதனத்தில் கூகுளின் ஆண்ட்ராய்டு வியர் 2.0 மென்பொருள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. 

ஹூவாய் நிறுவனத்தின் புதிய வாட்ச் 2 சாதனத்தில் எல்டிஇ தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதே தொழில்நுட்பம் சாம்சங் கியர் S3 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்திலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வெளியாக இருக்கும் ஹூவாய் வாட்ச் முந்தைய பதிப்பை விட சிறப்பான வடிவமைப்பை கொணடிருக்கும் என்றும் ஹூவாய் வாட்ச் 2 இரண்டு மாடல்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. ஒரு மாடலில் பில்ட்-இன் சிம் கார்டு வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போன் இல்லாமலும் பயன்படுத்த முடியும். பில்ட்-இன் எல்டிஇ தொழில்நுட்பம் வை-பை நெட்வொர்க் இல்லாத இடங்களிலும், இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடியாத போதும் பயன்படுத்தலாம்.  

ஹூவாய் வாட்ச் 2 சாதனத்தில் ஆண்ட்ராய்டு வியர் 2.0 வழங்கப்பட்டுள்ளதால் தனிப்பட்ட செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்படுகின்றது. இறுதியாக வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு வியர் 2.0 பிரீவியூவில் ஐபோன்களில் இயங்கும் திறன் காணப்பட்டது. இதனால் ஆண்ட்ராய்டு வியர் 2.0 மென்பொருளை ஐபோனிலும் பயன்படுத்த முடியும். 

மேம்படுத்தப்பட்ட இயங்குதளங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்வாட்ச்களுக்கென பிரத்தியேக பிளே ஸ்டோர்களை கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த செயலிகளை பிரவுஸ் செய்து பயன்படுத்தலாம். 

முன்னதாக வெளியிடப்பட்ட ஹூவாய் வாட்ச் 1.4 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 சிப்செட் 512 எம்பி ரேம், 4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருந்தது. இத்துடன் 300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டது. இந்தியாவில் ஹூவாய் வாட்ச் ரூ.22,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. புதிய ஹூவாய் வாட்ச் 2 முந்தைய பதிப்பை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கும் என்பதால் இதன் விலை அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

Similar News