தொழில்நுட்பம்

ஐபோன் 7-ல் ஹெட்போன் ஜாக், கூடுதல் பேட்டரியை நீங்களும் பெறலாம்

Published On 2017-01-05 14:57 GMT   |   Update On 2017-01-05 14:57 GMT
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 7-ல் ஹெட்போன் ஜாக் மற்றும் கூடுதலாக 3000 எம்ஏஎச் பேட்டரி பெறுவது எப்படி என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
சான்பிரான்சிஸ்கோ:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டு அதற்கு மாற்றாக ஏர்பாட்ஸ் என்ற பெயரில் புதிய வயர்லெஸ் ஹெட்போன்களை வெளியிட்டது. 

இந்நிலையில் ஐபோன் 7 ஸ்மார்ட்போனிற்கு ஹெட்போன் ஜாக் மற்றும் கூடுதலாக 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியை வழங்கும் புதிய சாதனம் நடைபெற்று வரும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட்போன்களுக்கு கூடுதல் உபகரணங்களை (Accessories) தயாரித்து விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமான கிரிஃபின் ஐபோன் 7 கேஸ் வகையை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த கேஸ் மூலம் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டுள்ளது. 

ஐபோன் 7-ல் 1960 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய கேஸ் மூலம் 1.5 மடங்கு கூடுதல் பேட்டரி பெற முடியும். இதோடு ஐபோன்  7-ல் முழு சார்ஜ் தீர்ந்து போனாலும், கிரிஃபின் கேஸ் கொண்டு முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 

கிரிஃபின் ரிசர்வ் ஐபோன் 7 கேஸ் ஆப்பிளின் MFi சான்று பெற்றிருப்பதால் அதிகாரப்பூர்வமாக ஐபோனுடன் இவற்றை பயன்படுத்த முடியும். இதன் விலை 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,700க்கு விற்பனை செய்யப்படும் என்றும் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News