தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் சைக்கிள் அறிமுகம்

Published On 2017-01-05 14:15 GMT   |   Update On 2017-01-05 14:15 GMT
லீஇகோ நிறுவனம் புதிய ஸ்மார்ட் மிதிவண்டிகளை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் மிதிவண்டி குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
சான்பிரான்சிஸ்கோ: 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா நடைபெற்று வருகிறது. இதில் லீஇகோ நிறுவனம் அமெரிக்க சந்தைக்கென 18.5 பவுண்டு எடை கொண்ட புதிய வகை ஸ்மார்ட் மிதிவண்டிகளை அறிமுகம் செய்துள்ளது. 

ஆண்ட்ராய்டு சார்ந்த பைக் ஓஎஸ் (BikeOS) கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் சைக்கிள் தொடுதிரை டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனால் இந்த மிதிவண்டியை ஓட்டுபவர் வழியை திரையில் பார்க்கலாம் என்பதோடு உடலில் ஏற்படும் மாற்றங்களை டிராக் செய்ய முடியும். லீஇகோ ஸ்மார்ட் ரோட் பைக் என அழைக்கப்படும் இந்த மிதிவண்டி ஏரோடைனமிக் டோரே T700 கார்பன் ஃபைபர் ஃபிரேம், ஃபோர்க், சீட் போஸ்ட், கைப்பிடி மற்றும் சக்கரங்களை கொண்டுள்ளது.  



லீஇகோ ஸ்மார்ட் மிதிவண்டிகள் ஆண்ட்ராய்டு 6.0 சார்ந்த பைக் ஓஎஸ் மற்றும் 4.0 இன்ச் தொடுதிரை, குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர், 6000 எம்ஏஎச் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள தொடுதிரையில் வழி தெரியாத இடங்களில் மேப்களின் உதவியுடன் எளிதாக கண்டறிந்து பயணிக்க முடியும். இத்துடன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மியூசிக் பிளேபேக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

லீஇகோ ஸ்மார்ட் மிதிவண்டியுடன் வாக்கி-டாக்கீ தகவல் தொடர்பு முறையையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் லீஇகோ  ஸ்மார்ட் மிதிவண்டிகளை பயன்படுத்துவோருடன் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும், மேலும் இதற்கென வழங்கப்பட்டுள்ள செயலியையும் பயன்படுத்தலாம். இத்துடன் GPS/GLONASS, மற்றும், உடல் நடவடிக்கையை டிராக் செய்து தகவல் வழங்கும் பல்வேறு சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது.  

ஸ்மார்ட்போன் மற்றும் ஃபின்டஸ் பேன்ட் உள்ளிட்டவற்றை கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு லீஇகோவின் புதிய ஸ்மார்ட் மிதிவண்டி புதிய மாற்று சாதனமாக இருக்கும் என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட் மிதிவண்டியின் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News