தொழில்நுட்பம்

அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி டேப் S3 ரென்டர் இணையத்தில் லீக் ஆனது

Published On 2017-02-23 00:29 GMT   |   Update On 2017-02-23 00:29 GMT
சாம்சங் கேலக்ஸி டேப் S3 சாதனத்தின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது. அதில் புதிய சாம்சங் டேப்லெட்டில் வழங்கப்பட இருக்கும் சில சிறப்பம்சங்களும் வெளியாகின.
சியோல்:  

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் S3 அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சாதனத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை வெளியான புகைப்படமும் ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் காணப்பட்ட சாதனம் போன்றே இருக்கிறது. இத்துடன் கூடுதலாக கீபோர்டு ஒன்றும் காணப்படுகிறது.  

புதிய புகைப்படத்தில் சாம்சங் டேப்லெட்டுடன் காணப்படும் கீபோர்டு சர்பேஸ் கவர் அல்லது ஐபேட் ப்ரோ ஸ்மார்ட் கீபோர்டு போன்று காட்சியளிக்கிறது. எனினும் இந்த சாதனம் ஐபேட் ப்ரோ போன்று ஸ்மார்ட் கனெக்டர் கொண்டிருக்குமா அல்லது ப்ளூடூத் வசதி வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 



இத்துடன் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்பட்ட சாம்சங் நோட்ஸ் ஆப் இந்த டேப்லெட்டில் வழங்கப்படுவதை புதிய புகைப்படம் தெரியப்படுத்தியுள்ளது. மேலும் இந்த டேப்லெட்டுடன் சாம்சங் S-பேனா வழங்கப்படும் என்றும், இதில் எல்டிஇ வசதி கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சாதனத்தின் திரையில் ஏப்ரல் 4 என்ற தேதி இடம் பெற்றுள்ளது. இது பெரும்பாலும் விற்பனை தேதியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் நிறுவனத்தின் அறிமுக விழா பார்சிலோனாவில் வரும் ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கிறது.

Similar News