களை கட்டும் குலசை தசரா திருவிழா: 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான்.
- தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான். இதனை சுருக்கி 'குலசை' என்பார்கள்.
குலசை தசரா பெருந்திருவிழாவில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் நாள் திருவிழாவான அக்டோபர் 2-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த கோவிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞான மூர்த்தீஸ்வரரும், அம்பிகை முத்தாரம்மனும் வீற்றிருக்கிறார்கள்.
பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.
இந்த கோவில் முன்பு சாதாரண ஒரு தெருக் கோவிலாக இருந்து வந்தது. ஆனால் இன்று உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாக சிறப்பு பெற்று வளர்ச்சி பெற, அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் அளவு கடந்த நம்பிக்கை தான் காரணம்.
முன்பெல்லாம் அம்மை நோய் குணமாக வேண்டி மட்டுமே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை என சகல துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனின் அருளை பெறப் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் அதிகரித்து கொண்டே வருகிறது.
கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் அருள் பெறும் சக்தி தலமாகவே இந்த கோவில் விளங்கி வருகிறது. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறு வேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம் உள்ளதாம்.
இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதனை அம்மனே நேரில் வந்து கேட்பதாகக் கருதி மக்கள் தர்மம் செய்கிறார்கள்.
தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, நர்சு, போலீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று, அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, கோவில் உண்டியலில் செலுத்துவது தான் இதன் சிறப்பு ஆகும். முனிவர் வேடமானது முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதாகவும், குறவர் வேடமானது மன குறைகளை தீர்க்கும் எனவும், பெண்கள் வேடமானது திருமண குறையை தீர்க்கும் எனவும், காளி வேடம் காரிய சித்தியை தரும் எனவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடங்களை அணிந்து வருவர். காவல்துறை வேடம் முதல் செவிலியர், மருத்துவர், எமதர்மன், சித்திரகுப்தன் என பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிந்து வருவர்.
அம்மன் அருளின்படி , காளி வேடம் அணிபவர்கள் 41 நாட்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். அவர்கள் வீட்டருகே, குடில் அமைத்து அதில் அம்மனின் புகைப்படம் வைத்து தினமும் பூஜை செய்து அங்கேயே விரதம் இருந்து தங்கி இருப்பர். மற்ற வேடம் அனுபவர்கள் காளி வேடம் அணிபவர்களிடம் காப்பு கட்டி கொள்வர். மற்ற வேடம் அணிபவர்கள் குடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.
ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பது போல, ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. பச்சை வண்ண மாலையானது பசுமையான வாழ்வை தரும் எனவும், மஞ்சள் வண்ண மாலை மங்கல நிகழ்வை தருவதாகவும், கருங்காலி மாலை நல்லெண்ணத்தை தருவதாகவும், துளசி மாலை புனிதத்தை தருவதாகவும், ருத்திராட்ச மாலை சன்னியாச வாழ்வையும் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஒவ்வொரு வேடம் அணிந்தவர்களும், அது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அருகில் வீடுகளில் யாசகம் பெற்று, அந்த காணிக்கையுடன் சூரசம்காரம் நடக்கும் நாளன்று கோவில் சென்று தங்கள் வேடத்துடன் அம்மனை தரிசித்து பின்னர் கடலில் சென்று நீராடிவிட்டு வருவர்.
பின்னர் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, சூரனை வீழ்த்தும் சூரசம்கார நிகழ்வு கடற்கரையில் நிகழும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து இருப்பார்கள். சூரசம்காரம் முடிந்து அம்மன் சன்னதி தேரில் ஊர்வலம் வருவார்.
அம்மன் சன்னதியை அடைந்த பிறகு காப்பு தரிக்கப்படும். காளி வேடம் அணிந்தவர்கள் மட்டும் கோவிலில் காப்பு தரிப்பார்கள். மற்ற வேடம் அணிந்தவர்கள் காளி வேடம் அணிந்தவர்களிடம் காப்பு தரித்து கொள்வர். அதன் பிறகே குலசை முத்தாரம்மன் தசரா விரத காலம் நிறைவுபெறும்.
இந்த ஆண்டு தசரா திருவிழாவுக்காக 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த மாதம் 4-ந் தேதியே மாலை அணிந்தனர். 51 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த மாதம் 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 17-ந் தேதியும், 41 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 24-ந் தேதியும் விரதம் தொடங்கினர்.
கோவிலில் இன்று விரதம் தொடங்கிய பக்தர்கள்.
31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த 13-ந் தேதியும் விரதம் தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குலசை வந்து கடற்கரையில் நீராடி அம்மன் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் உடன்குடி, குலசை, திருச்செந்தூர் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் மாலை அணிந்த பக்தர்கள் காட்சியளிக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 7 லட்சம் பக்தர்கள், 2023-ம் ஆண்டு 8 லட்சம் பக்தர்கள், கடந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் வேடம் அணிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமான அளவில் பக்தர்கள் வேடம் அணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் உண்டியல் வசூலே, மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதிபடுத்துவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு சூரசம்ஹாரம் நாளில் மட்டும் 20 லட்சம் பேர் திரண்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.