வழிபாடு

தீய சக்திகளை அழிக்கும் குலசை முத்தாரம்மன்

Published On 2025-10-02 14:48 IST   |   Update On 2025-10-02 14:48:00 IST
  • முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள்.
  • குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும்.

கோவில் தோற்றம்

தமிழகத்தின் தசரா என்றாலே குலசை தான். மைசூர் தசராவை மிஞ்சும் வகையில், தமிழ்நாட்டின் தென்கோடி கடற்கரையில் மகிஷாசுரனை சக்தியின் அம்சமான முத்தாரம்மன் சம்ஹாரம் செய்கிறாள். சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் 'தென்மறைநாடு' என்று அழைக்கப்பட்டது.

பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியனின் மகன் குலசேகரப்பாண்டியன், இப்பகுதியை சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தான். கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுத்தபோது, அவன் கனவில் முத்தாரம்மன் தோன்றி அருளாசி வழங்கினாள். வெற்றி பெற்ற குலசேகரப்பாண்டியன் முத்தாரம்மனின் உத்தரவுபடி துறைமுகத்தைச் சீர்படுத்தி ஊரையும் பெரிதாக்கினான்.

பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை, 'முத்தாரம்மன்' என வழங்கலானாள். அம்மை நோயினை முத்துப் போட்டதாகக் கூறுவது மரபு. முத்துக் கண்டவர்கள் அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச் செய்வர். இதன்மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றிக் குணப்படுத்தியதால் அன்னை, 'முத்து ஆற்று அம்மன்' என்றழைத்து, அதுவே மருவி 'முத்தாரம்மன்' என அழைக்கப்படுகிறாள் என்றும் கூறப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் சுயம்பு வடிவிலேயே முத்தாரம்மனைப் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அன்னையின் திருமேனியினைக் கண்குளிரக் கண்டு, தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் அம்பாளிடம் வேண்டினர். ஒரு நாள் கனவில், தம்மோடு, ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் ஆசாரிக்குக் காட்சி அளித்து, ''இதேபோல் எமக்கு ஒரு சிலை செய்து வையுங்கள்'' என ஆணையிட்டார்.

அதன்படி அந்தச் சிலை, மயிலாடியில் இருந்து வரவழைக்கப்பட்டு சுயம்புவாக முளைத்துள்ள அம்பாளின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. முத்தாரம்மன் அருகே சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பதும், இருவருமே வடக்கு நோக்கி காட்சி தருவதும் இத்தலத்திற்கு மட்டுமே உள்ள பெருமையாகும்.

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும், மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர். மக்களின் துன்பம் கண்டு சகிக்க முடியாத அன்னையும், மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு முத்தாரம்மனாகப் பூமிக்கு வந்தாள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை போல ஆனார்கள். அதேபோல இந்திரனும், திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக மாறினார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் வந்தது. அன்னை அவர்கள் கொடுத்த ஆயுதங்களைப் பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

தவவலிமை மிக்க வரமுனி, ஆணவம் மிகுதியால் அவரது இருப்பிடம் வழியாக வந்த அகத்திய முனிவரை மதிக்கத் தவறியதோடு அவமரியாதையும் செய்தார். மனம் நொந்த அகத்தியர், வரமுனியை எருமைத்தலையும், மனித உடலும் பெற்று குலசேகரப்பட்டினம் இறைவியால் அழிவாயாக எனச் சாபமிட்டார். அகத்திய முனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத்தலையும் மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். ஆனாலும் தனது தவவலிமையால் பல வரங்களைப் பெற்றார். முனிவராக வாழ்வைத் துவங்கிய வரமுனி, தனது வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாகவே வாழ்வை நடத்தினார்.

அவரின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி கடும் வேள்வி நடத்தினர். மகிஷாசுரனின் கொடூர செயல்களுக்கு முடிவுகட்டும் விதமாக அவனை அழித்தாள் லலிதாம்பிகை. இந்தப் புனித நாள்தான் தசரா பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை பராசக்தி, வேள்வியில் வளர்ந்த ஒன்பது நாட்களும் `நவராத்திரி' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நவராத்திரி தினங்களில் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சுமார் 4 கிலோமீட்டர் பரப்பளவுக்கு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுமார் 800-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் விதம், விதமான வேடத்தில் வந்து குலசையைக் குதூகலப் படுத்துவார்கள். ஒவ்வொரு குழுவும் தனித் தனியாக மேளம் முழங்க வட்டம், வட்டமாக நின்று ஆடுவதைக் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக விளங்கும்.

குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-வது நாள் விஜய தசமி தினத்தன்று மகிஷாசுரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் கொடியேற்றத்துடன் தசரா பண்டிகை தொடங்கும். கொடியேற்ற நாளுக்கு முந்தைய இரவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தேவதைகளுக்குக் காப்பு கட்டப்படும். முதல் நாளில் அம்பாள் துர்க்கை கோலத்தில் காட்சி தருவாள். இரண்டாம் நாள் விசுவகர்மேஸ்வரர் கோலத்திலும், மூன்றாம் நாள் பார்வதி கோலத்திலும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், ஐந்தாம் நாள் நவநீத கிருஷ்ணர் கோலத்திலும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் ஆனந்த நடராசராகவும், எட்டாம் நாள் அலைமகள் கோலத்திலும், ஒன்பதாம் நாள் கலைமகள் கோலத்திலும் காட்சியளித்து வீதிஉலா வருகிறாள்.

பத்தாம் நாள் பிற்பகலில் தசமி திதியில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், மகிஷாசுர சம்ஹாரத்திற்காகக் கொண்டு செல்லப்படும் சூலத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற பிறகு, மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு, கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேசுவரர் கோவிலை நோக்கி அம்பாள் புறப்பாடு நடைபெறும். காளிவேடம் போட்டு இருக்கும் அனைவரும் தேர்மண்டபத்துக்கு வந்து, அம்மனைச் சூழ்ந்து நிற்பார்கள். அம்மன் அசுரனைத் தம் சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் தம் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனைக் குத்துவார்கள். உலகத்தில் தர்மத்தைக் காத்து அதர்மத்தை அடியோடு வீழ்த்த இந்த வதத்தை அம்பாள் செய்வதாக ஐதீகம். இது தமிழ்நாட்டில் எந்த ஊர் விழாவிலும் காண முடியாத, காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.

இதனையடுத்து, சிதம்பரேஸ்வரர் ஆலயத்தை வந்தடையும் அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பதினோராவது நாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். அம்பாள் மாலை கோவிலை வந்தடைந்த பின்னரே, கொடி இறக்கப்படும். அதன்பிறகு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளைக் களைந்து விடுவார்கள். இரவில் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறும். 12-வது நாள் முற்பகலில் முத்தாரம்மனைக் குளிர்விப்பதாகக் குடம், குடமாகப் பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா சிறப்பாக நிறைவடையும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர்- கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது.

Tags:    

Similar News