மலையடிவாரத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
ஆவணி அமாவாசை - சதுரகிரியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
- பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.
- மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு இன்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. இதனால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்கு பின் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
6.30 மணியளவில் நுழைவுவாயில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் உடைமைகளை சோதனையிட்ட பின் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர்.
பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். கடும் வெயிலை தவிர்க்க காலையிலேயே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதில் ஆர்வம் காட்டினர்.
இன்று ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்கா வலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.
ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.