கோப்பு படம்.
தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
- வில்லியனூரில் பஞ்சர் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தனது மனைவியிடம் தன்னால் குடும்பத்துக்கு சம்பாதித்து தரமுடியவில்லையே என்று வேதனையுடன் தெரிவித்து வந்தார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் பஞ்சர் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர் கோட்டைமேடு கண்ணகி நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது57). இவர் வில்லியனூர் கோட்டைமேடு-விழுப்புரம் மெயின் ரோட்டில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு அய்யனார் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டார். இதில் தலையில் அடிப்பட்ட அவருக்கு ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து விட்டது.
இதனால் அவர் பஞ்சர் கடையை நடத்த முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். அவ்வப்போது தனது மனைவியிடம் தன்னால் குடும்பத்துக்கு சம்பாதித்து தரமுடியவில்லையே என்று வேதனையுடன் தெரிவித்து வந்தார்.
இந்தநிலையில் விஜயா சுயஉதவி குழுவில் பணம் செலுத்துவதற்காக பக்கத்து தெருவிற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அய்யனார் மின் விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.