புதுச்சேரி

புதுவை நகர பகுதிக்கு கரையாம்புத்தூரில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதற்கு கிராம மக்கள் கையெழுத்திட்டு எதிர்ப்பு தெரிவித்த காட்சி.

ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

Published On 2022-06-06 15:35 IST   |   Update On 2022-06-06 15:35:00 IST
  • கரையாம்புத்தூரில்ஆழ்துளை கிணறு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • கரையாம்புத்தூர் வண்ணான் குளம் அருகில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான வாகனம் கொண்டுவரப்பட்டு ஏற்பாடுகள் கடந்த மாதம் நடைபெற இருந்தது.

புதுச்சேரி:

புதுவை நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு 5கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுவை அரசு பொதுப்பணித்துறை மூலம், நகர பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக, நெட்டப்பாக்கம் தொகுதி கரையாம்புத்தூர் வண்ணான் குளம் அருகில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான வாகனம் கொண்டுவரப்பட்டு ஏற்பாடுகள் கடந்த மாதம் நடைபெற இருந்தது.

இதற்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் குடிநீர் திட்டம் தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த மாதம் 30-ந் தேதி புதுவையில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கரையாம்புத்தூர், பனையடி குப்பம், மணமேடு, சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர் உள்ளிட்ட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் கிராம மக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் குடிநீர் கொண்டு செல்வதற்க்கு கிராம மக்கள் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று 5கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், குடிநீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அரசு ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டத்தை கைவிட வில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கரையாம்புத்தூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News