புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் அறிவிக்கப்படாத அவசர நிலை -நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2022-10-03 08:36 GMT   |   Update On 2022-10-03 08:36 GMT
  • மின் ஊழியர்கள் போராட்டத்தாலும், அதன் விளைவுகளாலும் புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது.
  • 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியார் வசம் செல்லும். கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

புதுச்சேரி:

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மின் ஊழியர்கள் போராட்டத்தாலும், அதன் விளைவுகளாலும் புதுவை கலவர பூமியாக மாறியுள்ளது. மின்துறையை தனியார் மயமாக்குவதால் புதுவை மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தனியார் வசம் செல்லும். கட்டணம் அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் தான் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் எதிர்த்தோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்காது. அரசு அலுவலகங்கள் மற்றும் தெரு விளக்குகளுக்கு அரசு மின் கட்டணம் செலுத்துவதில்லை இதற்கு பாக்கி 800 கோடி நிலுவையில் உள்ளது. இவற்றை எல்லாம் தனியார் மயமானால் செலுத்த வேண்டியிருக்கும்.

புதுவையை பொருத்த மட்டில் மின்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை. ரூ.1500 கோடிக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து நஷ்டம் இல்லாமல் விற்பனை செய்து வருகின்றனர். மின்துறையை தனியார் மயமாக்க பொதுமக்கள், தொழிற்சங்கம், அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படவில்லை. தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது எஸ்மா சட்டம் பாயும் என கூறுகின்றனர். புதுவையில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுவையின் சிறப்பு சி.எம். கவர்னர் தான் என்பது நிரூபணமாகி உள்ளது.

மின்துறையை தனியார்மயமாக்க ரங்கசாமிக்கு விருப்பம் உள்ளதா என்பதை அவர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் மின் ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்தோம். தனியார் மயமாக்கத்திற்காக அறிவிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய முடியாது என மின்துறை அமைச்சர் கூறுகிறார்.

மாநில அரசு அறிவித்த டெண்டரை ரத்து செய்வதில் என்ன கஷ்டம்.? தனியார் மயத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவதோடு, நீதிமன்றம் வரை செல்வோம்.

ஆர்.எஸ்.எஸ். பேரணியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றது அவமானம். அமைச்சர்களாக இருக்கவே தகுதி இல்லை. துணை ராணுவத்தை கொண்டு வந்து மிரட்டுவதற்கு புதுவை மக்கள் பயப்பட மாட்டார்கள். கவர்னருக்கு நாவடக்கம் தேவை. அவர் பா.ஜனதா ஏஜெண்டாக செயல்படுகிறார். முதல்- அமைச்சர் ரங்கசாமி மீது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஊழல் புகார் கூறுகிறார்கள்.

என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை பதவி விலக கூறுகிறார்கள். மகா அலங்கோலமான ஒரு ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சி குறை பிரசவத்தில் முடியும் என்பதுதான் எனது கணிப்பு.

மக்கள் இதனை தூக்கி எரிவார்கள். முரண்பாடான கொள்கைகள் கொண்ட 2 கட்சிகள் கூட்டணியாக ஆட்சிய செய்கின்றனர். இதனால் தான் வளர்ச்சி இல்லை. புதிய கல்வி கொள்கையை மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் எதிர்க்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News