கவர்னர் மாளிகை எதிரே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற காட்சி.
ஊழியரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள்
- புதுவை கவர்னர் மாளிகையில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
- மோட்டார் சைக்கிளை கவர்னர் மாளிகை பின் பக்க நுழைவு வாயிலில் நிறுத்தி விட்டு சமையல் வேலையில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:
புதுவை ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் புதுவை கவர்னர் மாளிகையில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் காலை கவர்னர் மாளிகைக்கு பணிக்கு வந்த பழனி அவரது மோட்டார் சைக்கிளை கவர்னர் மாளிகை பின் பக்க நுழைவு வாயிலில் நிறுத்தி விட்டு சமையல் வேலையில் ஈடுபட்டார். பின்னர் பழனி பணி முடிந்த பின்பு வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது காலை 11 மணியளவில் கல்லூரி மாணவர்கள் போல் டிப்-டாப் உடை அணிந்து கொண்டு வந்த 2 வாலிபர்கள் கள்ளசாவி போட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளுடன் பெரிய கடை போலீஸ் நிலையத்தில் பழனி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம வாலிபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே நகர பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் தொடந்து திருடப்பட்டு வரும் நிலையில் தற்போது கவர்னர் மாளிகை வாயிலில் போலீசார் அதிகம் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருக்கும் இடத்தில், பட்ட பகலில் வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் ராஜ்நிவாசில் பணிபுரியும் மற்ற ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.