ரவுடி ரிஷி.
- நெல்லித்தோப்பு பெரியார் நகரில் ரவுடியை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த ஆண்டு வினோத்தையும் சாலமனின் கூட்டாளிகளையும் ரிஷி தாக்கியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
நெல்லித்தோப்பு பெரியார் நகரில் ரவுடியை ஒரு கும்பல் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்தவர் ரிஷி (வயது 25) ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
இவருக்கும் நெல்லித்தோப்பை சேர்ந்த சாலமன், வினோத் ஆகியோருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த ஆண்டு வினோத்தையும் சாலமனின் கூட்டாளிகளையும் ரிஷி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரிஷி மீது வினோத்தும் சாலமனும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். மேலும் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டு இருந்தனர். ரிஷி எங்கெங்கு சென்று வருகிறார் என்பதையும் நோட்டமிட்டு வந்தனர்.
இந்த நிலையில் ரிஷி மது குடித்து விட்டு பெரியார் நகர் வழியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சாலமன், வினோத் மற்றும் இவர்களது கூட்டாளிகள் 4 பேர் ரிஷியை வழிமறித்தனர். தன்னை கொலை செய்ய கும்பல் வழிமறிப்பதை கண்ட ரிஷி அவர்களிடமிருந்து உயிர் தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி ரிஷியை கத்தியால் வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் ரிஷி மயங்கி சாய்ந்தார். உடனே அந்த கும்பல் ரிஷி இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் ரிஷியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு ரிஷி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உருளையன் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இதில் சம்மந்தப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.