புதுச்சேரி

9 வகை சீர்வரிசையுடன் ஏழை கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு- சாலையோர வியாபாரிகள் நடத்தி வைத்தனர்

Published On 2023-01-06 05:34 GMT   |   Update On 2023-01-06 05:34 GMT
  • கர்ப்பிணி பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து சடங்குகள் செய்த பெண்களுக்கு பூ பழங்களுடன் தட்டு வரிசையும் வழங்கப்பட்டது.
  • கர்ப்பிணிக்கு சக வியாபாரிகள் வளைகாப்பு செய்து வைத்து சம்பவம் புதுவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி:

டெல்லியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் புதுவை கடற்கரை சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக கடற்கரைக்கு வரும் மக்களை நம்பி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் அடிக்கடி வந்து பொருள் வாங்கிய புதுவை லாஸ்பேட்டை சேர்ந்த பவித்ரா என்ற இளம் பெண்ணுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது.

இதனை அடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவித்ராவை கணேஷ் திருமணம் செய்து கொண்டார்.தற்போது பவித்ரா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஆதரவற்ற இவர்களுக்கு உதவி செய்ய வேறு யாரும் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் ஏழ்மை நிலையில் இவர்கள் வாடி வருகின்றனர்.

இதனை அறிந்த கடற்கரையில் வியாபாரம் செய்யும் சக வியாபாரிகள் பவித்ராவுக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்து அந்த வளைகாப்பை கடலோர சாலையில் சிறப்பாக நடத்தினார்கள்.

மேலும் வளைகாப்பின் போது ஒரு பெண்ணிற்கு தாய் வீட்டில் இருந்து என்னென்ன சீதனங்கள் செய்வார்களோ அந்த சீதனங்களான பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், மற்றும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், என 9 வகையான சாதங்களுடன் பவித்ராவுக்கு வளைகாப்பை சக வியாபாரிகள் செய்து வைத்தனர்.

மேலும் வளைகாப்பின் போது கர்ப்பிணி பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து சடங்குகள் செய்த பெண்களுக்கு பூ பழங்களுடன் தட்டு வரிசையும் வழங்கப்பட்டது.

ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்த சாலையோர வியாபார நிறைமாத கர்ப்பிணிக்கு சக வியாபாரிகள் வளைகாப்பு செய்து வைத்து சம்பவம் புதுவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News