புதுவை கால்நடைத்துறை அலுவலகத்தில் தாமதமாக வந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய கலெக்டர்
- கலெக்டர் மணிகண்டன் இன்று காலை கால்நடைத்துறைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பணி தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உடனே நோட்டீசும் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
ஆய்வுகள் நடத்திய சில நாட்கள் மட்டும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகின்றனர். அதன்பிறகு அவர்கள் தங்களது பழைய நிலைக்கே சென்றுவிடுகின்றனர்.
இந்நிலையில் கலெக்டர் மணிகண்டன் இன்று காலை கால்நடைத்துறைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றும் 40 ஊழியர்களில் 13 பேர் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை.
தாமதமாக பணிக்கு வந்த ஊழியர்களை உடனே வீட்டுக்கு செல்லும்படி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பணி தாமதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உடனே நோட்டீசும் வழங்கப்பட்டது.
இனி இதுபோன்ற ஆய்வு அனைத்து அரசு அலுவலங்களிலும் நடைபெறும் என்றும், தாமதமாக வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.