விஷப் பூச்சிகள் கடித்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை படத்தில் காணலாம்.
கோவில் கும்பாபிஷேகத்தில் விஷப் பூச்சிகள் கடித்து 20 பேர் காயம்: காரைக்காலில் பரபரப்பு
- கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக ஒதுங்கி நின்ற குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பூச்சி கடித்ததில் பாதிக்கப்பட்டனர்.
- சம்பவம் குறித்து திருநள்ளாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் உள்ள அய்யனார் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவில் அருகில் இருந்த அரச மரத்தில் இருந்து திடீரென்று விஷப்பூச்சிகள் பறந்து வந்து பக்தர்களை கடித்துள்ளது. இதில் அங்கிருந்து பக்தர்கள் அனைவரும் அலறடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக ஒதுங்கி நின்ற குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பூச்சி கடித்ததில் பாதிக்கப்பட்டனர்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து திருநள்ளாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சூரக்குடியில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதி மரங்களில் விஷப் பூச்சிகள் கூடு கட்டியுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.