புதுவையில் மூதாட்டியிடம் நூதன முறையில் ரூ.7.80 லட்சம் சீட்டு பணம் மோசடி
- நிஷா மீதி சீட்டு பணம் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை கேட்ட போது ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து விட்டதாக லோகேஷ் தெரிவித்தார்.
- புதுவையில் மூதாட்டியிடம் நூதன முறையில் ரூ.7.80 லட்சம் சீட்டு பணம் மோசடி செய்த அண்ணன்-தம்பி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை ராஜா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி நிஷா (வயது63). இவர் அருகில் உள்ள அருந்ததி நகரை சேர்ந்த லோகு என்ற லோகேஷ் மற்றும் அவரது சகோதரர் மணி என்ற மணிகண்டன் ஆகியோர் நடத்திய ஏலச்சீட்டில் தனது பெயரில் ரூ.2லட்சம் வீதம் 2 சீட்டும், தனது மகன் இதயதுல்லா பெயரில் ரூ.2லட்சம் வீதம் 2 சீட்டும் கட்டி வந்தார். மொத்தம் 40 பேர் இதில் பணம் கட்டி வந்தனர். நிஷா தனது பெயரிலும், மகன் பெயரிலும் கட்டி வந்த ஏலச்சீட்டு பணத்தை கடைசியாக எடுத்துகொள்ள முடிவு செய்து பணத்தை செலுத்தி வந்தார்.
இதில் அனைவரும் சீட்டு தொகையை பெற்று விட்ட நிலையில் நிஷா 4 சீட்டுக்கான தொகையை லோகேசிடம் கேட்டார். அப்போது லோகேஷ் ரூ.20 ஆயிரத்தை நிஷாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றுக்கொண்டார். மீதி தொகையை கேட்ட போது சில நாட்களில் கொடுத்து விடுவதாக லோகேஷ் உறுதி அளித்தார். ஆனால் சில மாதங்கள் கடந்தும் லோகேஷ் மீதி பணத்தை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நிஷா மீதி சீட்டு பணம் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை கேட்ட போது ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து விட்டதாக லோகேஷ் தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த நிஷா தான் ரூ.6 லட்சம் பெறவில்லை என்று லோகேசிடம் கூறிய போது லோகேஷ் நிஷா கையெழுத்திட்டிருந்த நோட்டு புத்தக்தை காட்டினார். அதில் ரூ.20 ஆயிரத்துக்கு முன்பு 6 எண் நம்பரை சேர்த்து ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் பெற்றதாக எழுதி இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து லோகேஷ் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டனிடம் நிஷா தட்டிக்கேட்ட போது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி உன்னை அடித்து போட்டால் கேட்க ஆள் இல்லை. இங்கேயே வெட்டி புதைத்து விடுவோம். கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொண்டு ஓடி விடு. இல்லையென்றால் இந்த ஊரிலேயே நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்று இருவரும் மிரட்டினர். நிஷாவின் மகன் இதயதுல்லாவும் பலமுறை கேட்டும் அவர்கள் சீட்டு பணத்தை கொடுக்கவில்லை.
இதனால் மனஉளைச்சல் அடைந்த நிஷா நூதன முறையில் சீட்டு பணத்தை மோசடி செய்த லோகேஷ் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் குறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.