புதுச்சேரி

புதுவை அழகு நிலையத்தில் புகுந்து கத்தி முனையில் நகை-பணத்தை பறித்து சென்ற ரவுடி கும்பல்

Published On 2022-06-07 15:37 IST   |   Update On 2022-06-07 15:37:00 IST
  • அழகு நிலையத்தில் 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஊழியர்களை மிரட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • அழகு நிலைய உரிமையாளர் விஜயலட்சுமி உடனடியாக பெரியக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

புதுச்சேரி:

புதுவை ரோடியர்பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜீவகன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது30). இவர் புதுவை சங்கரதாஸ் வீதியில் ஒரு கட்டிடத்தின் மாடியில் அழகு நிலையத்துடன் ஸ்பா நடத்தி வருகிறார்.

நேற்று மாலை விஜயலட்சுமி அழகு நிலைய ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் வந்து சென்ற பின்னர் அழகு நிலையத்தை பூட்டி சாவியை வீட்டில் வந்த கொடுக்கும்படி கூறி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

ஆனால் இரவு 10 மணி ஆகியும் ஊழியர்கள் சாவியை எடுத்து வந்து கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து விஜயலட்சுமி கடை ஊழியர்களுக்கு போன் செய்தார். ஆனால் கடை ஊழியர்கள் போனை எடுத்து பேசவில்லை.

இதையடுத்து தனது செல்போனில் பொறுத்தப்பட்டுள்ள அழகு நிலைய சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது அழகு நிலையத்தில் 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஊழியர்களை மிரட்டிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே விஜயலட்சுமி அழகு நிலையத்துக்கு விரைந்து வந்தார். அப்போது அந்த கும்பல் விஜயலட்சுமியையும், கடை ஊழியர்களையும் கத்தியை காட்டி எங்களுக்கு மாமூல் கொடுக்காமல் எப்படி அழகு நிலையத்தை நடத்தலாம் என கூறி உடனடியாக எங்களுக்கு மாமூல் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியது.

மேலும் அழகு நிலைய கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கடை ஊழியர்களிடமிருந்து ரூ.11 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்ட அந்த கும்பல் கடை ஊழியர் அனிதா கழுத்தில் அணிந்திருந்த ½பவுன் செயினையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டது.

இதுகுறித்து அழகு நிலைய உரிமையாளர் விஜயலட்சுமி உடனடியாக பெரியக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற கும்பலை அடையாளம் கண்டனர்.

விசாரணையில் அவர்கள் ரெயின்போநகரை சேர்ந்த சத்யா என்ற சிவபெருமாள், லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் விஸ்வா, விக்கி என்ற விக்னேஷ், எலி என்ற எலி விஜய், நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி மற்றும் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலா என்பது தெரியவந்தது.

ரவுடிகளான இவர்களில் சத்யா, கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் கிருஷ்ணகுமார் சிக்கினார். மற்ற 6 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Similar News