புதுச்சேரி

120 அடி ஆழ கிணற்றில் 3 நாட்களாக தவித்த முதியவர் உயிருடன் மீட்பு

Published On 2023-05-13 10:41 IST   |   Update On 2023-05-13 10:41:00 IST
  • தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த முதியவரை 2 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்டனர்.
  • லேசான காயமடைந்த அவரிடம் விசாரித்தபோது, கிணற்றில் விழுந்து 3 நாட்கள் ஆகிறது, 2 நாட்கள் ஆகிறது என முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தார்.

புதுச்சேரி:

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் பாவாடை (70). இவர்கடந்த 10-ந் தேதி புதுவை மடுகரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

அன்று இரவு மீண்டும் ஊர் திரும்பி சென்றார். அப்போது மடுகரை பட்டாம்பாக்கம் சாலையில் சென்றபோது மழை பெய்தது. இதனால் சாலையோரம் இருந்த விவசாய நிலத்தில் ஒதுங்கினார். அப்போது 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்து விட்டார். கிணற்றில் 2 அடி தண்ணீர் இருந்ததால் அவருக்கு பலமான அடிபடவில்லை. தன்னை காப்பாற்ற கூக்குரல் எழுப்பினார்.

ஆனால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பாவாடையின் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

இதனால் தொடர்ந்து கூக்குரலிட்ட அவர் மயங்கினார். நேற்று காலை அவருக்கு லேசாக மயக்கம் தெளிந்தது.

இதனையடுத்து மீண்டும் தன்னை காப்பாற்றும்படி கத்தியுள்ளார். அப்போது அந்த வழியே சென்ற ஒருவர் முதியவர் குறித்த தகவலை மடுகரை தீயணைப்பு நிலையத்துக்கு கொடுத்தார்.

தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த முதியவரை 2 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்டனர். நெற்றி உட்பட லேசான காயமடைந்த அவரிடம் விசாரித்தபோது, கிணற்றில் விழுந்து 3 நாட்கள் ஆகிறது, 2 நாட்கள் ஆகிறது என முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தார்.

இதையடுத்து அவருக்கு மடுகரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் அவரை பட்டாம்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News