கட்சி அலுவலகத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில் புதுவை காங்கிரசார் மோதல்
- காங்கிரஸ் கட்சி புதுவையில் வலுவான கட்சியாகத்தான் இன்றும் உள்ளது.
- என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர்.
புதுச்சேரி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து 3-வது நாளாக இன்று ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளது.
சோனியாகாந்தி, ராகுல் காந்தி மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுவை காங்கிரசார் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதன்படி புதுவையிலும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், அனந்தராமன், நிர்வாகிகள் ரகுமான், கருணாநிதி, தனுசு, இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி புதுவையில் வலுவான கட்சியாகத்தான் இன்றும் உள்ளது. என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில்தான் உள்ளனர். புதுவையில் ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த காங்கிரசார் பலர் உள்ளனர். அவர்களின் வாரிசுகள் வேறு கட்சிக்கு சென்றிருக்கலாம். அவர்களை யெல்லாம் அழைத்து பேச வேண்டும்.
புதுவையில் தனித்தனியே கமிட்டி போட்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். அதற்கு தேவையான வேட்பாளர்கள் உள்ளனர். தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது. அதேநிலை புதுவைக்கு ஏற்படக்கூடாது.
புதுவையில் காங்கிரஸ் யாரையும் சார்ந்திராமல் தனித்து போட்டியிட வேண்டும்.
கடந்த முறை தேர்தலில் என்னை முதல்-அமைச்சர் என கூறினீர்கள், பின்னர் நீங்கள் முதல்-அமைச்சர் ஆனீர்கள். கட்சித்தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.பி.க்கு எல்லாம் வயதாகி விட்டது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கவர்னர், வெளிநாட்டு தூதர், துணை ஜனாதிபதி என வேறு பதவிகளை வாங்கி சென்று விடுங்கள்.
புதுவையில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். நானும் அந்த வயதுக்கு வந்தால் பதவியில் இருக்கமாட்டேன் என பேசினார்.
அப்போது நாராயண சாமி குறுக்கிட்டு, ஏம்பலம் தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம், கந்தசாமி கூட முதல்-அமைச்சர் ஆகலாம் என்றுதான் கூறினேன். நீங்கள்தான் முதல்-அமைச்சர் என கூறவில்லை. கட்சித்தலைமை யாரை கைகாட்டுகிறதோ? அவர்கள்தான் பதவிக்கு வருவார்கள் என்றார்.
இதையே சொல்லி எத்தனை காலம் ஏமாற்று வீர்கள்? என கந்தசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு நாராயணசாமியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிராக கந்தசாமி ஆதரவாளர்கள் பேசினர். இதனால் இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி, போராட்டத்தை அலுவலகத்துக்குள் நடத்துவதில் என்ன பயன்? மக்களுக்கு தெரியப்படுத்துவோம், ரெயில் மறியல் செய்யலாம், சாலை மறியல் செய்யலாம் என அழைத்தார். அதற்கு எதிர்தரப்பில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, கட்சி அலுவலகத்தில்தான் போராட்டம் நடத்த வேண்டும் என அறிவு றுத்தியுள்ளனர் என தெரி வித்தனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் இருந்து வெளியேறி அலுவலகத்துக்கு எதிரில் சாலையில் நற்காலியை போட்டு அமர்ந்து தர்ணா செய்தார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் அமர்ந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் தர்ணா நடந்தது.