பெண்கள் முன்னேற ஊக்கம் தர வேண்டும்- கவர்னர் தமிழிசை பேச்சு
- பெரிய விமானங்களையும், கப்பல்களையும் தயாரிக்கும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது.
- பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்து 3-வதுஇடத்துக்கு முன்னேறியுள்ளது.
புதுச்சேரி:
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொண்ட புதுவை- தமிழ்நாடு - அந்தமான் இயக்குனரகத்தை சேர்ந்த என்.சி.சி. மாணவ-மாணவிகள் அங்கு நடந்த பல்வேறு போட்டிகளில் 2-வது இடத்தை பெற்றனர். அகில இந்திய என்.சி.சி. போட்டிகளில் கப்பல் படை 7 பதக்கங்களும், தரைப்படை 2 பதக்கங்களும் வென்றன.
இந்த நிலையில் என்.சி.சி. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு என்.சி.சி. மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். பின்பு அவர் பேசியதாவது:-
குடியரசு தினவிழா அணிவகுப்பில் 2-வது இடம் பெற்றதற்கு எனது பாராட்டுகள். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சி தன்னம்பிக்கையையும், கலை, கலாசாரத்தின் மீதான ஆர்வத்தையும் கொடுத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திலும் என்.சி.சி. மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
எனக்கு நீங்கள் தயாரித்த விமானத்தையும், அமைச்சர் நமச்சிவாயத்துக்கு கப்பலையும் பரிசாக அளித்துள்ளீர்கள். பொம்மை விமானங்கள், கப்பல்கள் தயாரிப்பது மட்டுமல்ல. பிரதமர் கூறிய சுயசார்பு இந்தியா என்பதன் அடிப்படையில் கப்பல்களும், விமானங்களும் புதுவையில் தயாரிக்கப்பட வேண்டும். அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை.
இப்போது பெரிய விமானங்களையும், கப்பல்களையும் தயாரிக்கும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருந்து 3-வதுஇடத்துக்கு முன்னேறியுள்ளது. சீருடைகள் பெருமைக்காக அணிவது அல்ல. மற்றவர்களை காப்பாற்ற அணிவது என்பதை புரிந்து செயல்படவேண்டும். மாணவர்களுக்கு தேவையான உதவிகளை கவர்னர் மாளிகையும், கல்வித்துறையும் செய்யும். அடுத்த முறை முதல் இடத்தை பிடிக்க வேண்டும்.
முன்பு ராணுவம், காவல் துறை, என்.சி.சி. போன்றவற்றில் பெண்கள் பங்கேற்பதில் தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது பாரதி கூறியது போல் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை கொண்டு பெண்கள் மிடுக்காக வரும் போது ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும். அதற்கு ஊக்கம் தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.