புதுச்சேரி

நீதிபதி ராஜா மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு அளிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கிய காட்சி.

மக்கள் நீதிமன்றத்தில் 1300 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2022-06-26 08:31 GMT   |   Update On 2022-06-26 08:31 GMT
  • தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.
  • புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி, ஏனாம் நீதி மன்ற வளாகங்களில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

புதுச்சேரி:

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் புதுவை மாநிலத்தில் நடைபெற்றது.

புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகி, ஏனாம் நீதி மன்ற வளாகங்களில் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.மக்கள் நீதிமன்றத்தை, சென்னை ஐகோர்ட்டு நீதி பதி மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் ராஜா தொடங்கி வைத்தார்.

ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில்குமார், தலைமை நீதிபதி செல்வநாதன், முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ் வக்கீல்கள் சங்க தலைவர் குமரன், துணை தலைவர் தனலட்சுமி, செயலாளர் கதிர்வேல், அரசு வக்கீல்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நிலுவை, நேரடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை, வாகன விபத்து நஷ்டஈடு, கணவன், மனைவி பிரச்னை சம்பந்தம்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்றம், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில், தொழிலாளர், வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்காக புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகள், சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வு, காரைக்காலில் 3 அமர்வுகள், மாகியில் 2, ஏனாமில் 1 என மொத்தம் 16 அமர்வுகள் செயல்பட்டது.இதுபற்றி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ராஜா கூறியதாவது:-

சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். நீதிகேட்டு வருவோருக்கு நியாயப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்கள் நீதிமன்றம் கட்டமைப்பை உருவாக்கி, நீதிமன்றத்தில் பல காலங்களாக தேங்கி கிடக்கும் வழக்குகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

நீதியை காலதாமதம் இல்லாமல் வழங்கவே மக்கள் நீதிமன்றம் உருவாகியது. மக்கள் நீதிமன்றத்துக்கு வந்து நீதி கேட்பவர்கள் நீதிமன்ற கட்டணம் அளிக்க வேண்டியதில்லை. நீதிமன்றம் கேட்டு வழக்கு போடுபவர்கள் நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டும். மக்கள் நீதிமன்றம் முன்பு வந்து நீதிகேட்டால், நீதிமன்ற கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. நீதிமன்றத்தில் தாக்கலாகி மக்கள் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தால் நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெறலாம்.

நீண்ட ஆண்டு களுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. நீதிமன்ற கட்டணமே இல்லாமல் விரைவாக நீதி கிடைக்கும்.

தீர்ப்புகள் மேல்முறை யீட்டுக்கு எடுக்கப்படாது. உடன் பைசல் செய்யப்படு வதால், வீட்டிலும், நாட்டிலும் அமைதி நிலவும். இதன் மூலம் நீதிமன்றத்தில் தாக்கலாகி பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் வழக்குகளை தீர்வு காணலாம்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் புதுவை கிளை அமைப்பது தொடர்பாக அரசுதான் நடவடிக்கை எடுக்க இயலும். தமிழகத்தை ஒப்பிடுகையில் புதுவையில் வழக்குகள் எண்ணிக்கை குறைவுதான். கடந்தாண்டு 1300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது 1700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ராஜா கூறினார்.

Tags:    

Similar News