புதுச்சேரி

புதுச்சேரி கோவில் யானை லட்சுமி உடல் நல்லடக்கம்- ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி

Update: 2022-11-30 13:57 GMT
  • யானை லட்சுமி காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்
  • யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி:

புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று மரணம் அடைந்தது. இன்று காலை 6.15 மணியளவில் வழக்கமான நடைபயிற்சிக்கு யானையை பாகன் அழைத்துச்சென்றார். கல்வே பள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது. அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் யானை லட்சுமியின் உடல், கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் யானை லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதிச்சடங்கிற்கு பிறகு யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்பு அடக்கம் செய்யப்பட்டது.இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது. 5 வயதாக இருந்தபோது, 1996ல் தொழிலதிபர் ஒருவர் கோவிலுக்கு யானையை பரிசாக அளித்தார். வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். இந்த யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது. இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பாக பழகிவந்தது. காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். யானையைப் பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் வருவார்கள். யானை லட்சுமியின் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News