பொதுமக்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்திய காட்சி.
இலவச மனைப்பட்டா கோரி கஞ்சி காய்ச்சி போராட்டம்
- புதுவை மண்ணாடிப் பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம்பேட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு வழங்கிய இலவச மனைப்பட்டாவில் வசித்து வருகின்றனர்.
- போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை.
புதுச்சேரி:
புதுவை மண்ணாடிப் பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம்பேட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு வழங்கிய இலவச மனைப்பட்டாவில் வசித்து வருகின்றனர்.
சுமார் 60 ஆண்டுக்கும் மேலாக வசித்து வரும் இவர்கள் ஒரே வீட்டில் பல குடும்ப உறவினர்கள் வசித்து வருவதால் இட நெருக்கடியால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் புதிதாக பாட்கோ மூலம் வேறு மாற்று இடத்தில் கூடுதலாக இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் திடீரென இன்று காலை சந்தைபுதுக்குப்பம்- மயிலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். சாலையிலேயே அடுப்பு அமைத்து கஞ்சி காய்ச்சி குடித்தனர்.
போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடவில்லை. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, இதுவரை 4
எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து இலவச மனைப் பட்டா கோரி வருகிறோம்.
எங்கள் கோரிக்கையை யாரும் நிறைவேற்றவில்லை. மாற்றுஇடத்தில் குடும்பத்தினருக்கு மனைப்பட்டா வழங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த சாலை வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் சென்றன.