புதுச்சேரி

போலீஸ்காரரை தாக்கி செயின் பறிப்பு- கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2022-10-06 05:50 GMT   |   Update On 2022-10-06 05:50 GMT
  • வெங்கடேசன் புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
  • வெங்கடேசன் என்.ஆர். நகர் பகுதியில் வந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் அருகே ஓடைவெளி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33). இவர் புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு இவர் தனது நண்பர்களுடன் தவளக்குப்பத்தை அடுத்த இடையார்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்தார்.

பின்னர் தனியாக மோட்டார் சைக்கிளில் பழைய சுண்ணாம்பாறு ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது என்.ஆர். நகர் பகுதியில் வந்தபோது அங்கிருந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.

பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தனர். அதோடு சிலரை வரவழைத்து போலீஸ்காரர் வெங்கடேசனை மீண்டும் தாக்கினர்.

இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் உடனடியாக அவசர போலீஸ் 100-க்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

பின்னர் காயமடைந்த வெங்கடேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தவளகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிச்சாமி ஏட்டு லட்சுமணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் வெங்கடேசனை தாக்கிய கும்பல் முன் விரோதத்தால் தாக்கியதா? அல்லது தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் வெங்கடேசனை தாக்கி நகையை பறித்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்காரரை தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News