புதுச்சேரி

கோப்பு படம்.

நகராட்சி ஊழியர்களுக்கு தடையின்றி சம்பளம் வழங்க வேண்டும்-சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை

Published On 2022-07-09 14:52 IST   |   Update On 2022-07-09 14:52:00 IST
  • ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படாமலும் உள்ளது.
  • தற்போதைய நிலவரப்படி 4 மாத ஊழியம் நிலுவையில் உள்ளது

புதுச்சேரி:

முதல்-அமைச்சர் ரங்க சாமிக்கு முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., சம்பத் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை நகராட்சிக்கு போதிய வருவாய் இல்லாததால் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமலும் ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படாமலும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 4 மாத ஊழியம் நிலுவையில் உள்ளது.

அதேபோல் ஓய்வூதியம், ஊழியர்கள் பணி நிறைவின்போது கொடுக்கப்படும் ஓய்வு பலன்கள் என எதையும் செய்ய இயலாத நிலையில் புதுவை நகராட்சி உள்ளது. இன்றைய நிலவரப்படி புதுவை நகராட்சி 44.69 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்காமல் ஊழியருக்கு நிலுவை வைத்துள்ளது.

புதுவை நகராட்சியின் ஆணையர், துணை ஆணையர், முதுநிலை கணக்கு அதிகாரி மற்றும் சுகாதார அதிகாரி ஆகிய முக்கிய பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் அரசு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பிற ஊழியர்களுக்கு நகராட்சி மூலம் பெறப்படும் நிதி ஆதாரத்தைக் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

முக்கிய அதிகாரிகளுக்கு தங்கு தடையின்றி அரசு ஊதியம் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருவதால் இவர்களுக்கு நகராட்சியின் வருவாய் இழப்பை பற்றி எந்த கவலையும் இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கும் நகராட்சி மூலமே ஊதியம் பெற வேண்டும் என்ற நிலை இருந்திருந்தால் வருவாய் பெருக்க அக்கறை காட்டி இருப்பார்கள். நகராட்சிக்கு வருவாயை உருவாக்கக்கூடிய முக்கிய பதவியான வருவாய் அதிகாரி 1-ல் ஓய்வு பெற்ற 68 வயதான நபரை நியமிக்க வேண்டிய கட்டாயம் என்ன?.

நகராட்சி ஊழியர்களுக்கு ஊழியம் சரியான நேரத்தில் வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள் சிறப்பாக பணியாற்றி நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள இயலும். எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த குளறுபடிகளை களைந்து நகராட்சி ஊழியர்கள் சம்பளம் தங்கு தடை இன்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News