புதுச்சேரி

கோப்பு படம்

நில அதிகாரம் மாநில அரசிடமே இருக்க வேண்டும்-ஓம்சக்திசேகர் வலியுறுத்தல்

Published On 2022-06-27 09:53 GMT   |   Update On 2022-06-27 09:53 GMT
  • கவர்னர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன்னிலையில் நில அதிகாரத்தை கவர்னருக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
  • முதல்- அமைச்சரும் முடிவு செய்வது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

புதுச்சேரி:

புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன்னிலையில் நில அதிகாரத்தை கவர்னருக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிலம் தொடர்பான முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையும், முதல்- அமைச்சரும் முடிவு செய்வது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம்.

இப்போது கவர்னருக்கு அதை மாற்ற நினைப்பது புதுவை மக்களை வஞ்சிக்கும் செயலாகும். அரசின் பாதுகாப்பில் உள்ள நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஒரு சில அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக சில அரசு அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே இதுபோன்ற செயல்களுக்கு காரணமாகிறது.

அ.தி.மு.க. கூட்டணியின் முதல்-அமைச்சர் மக்களுக்கு நல்லாட்சி தர நினைக்கிறார். சில அதிகாரிகள் தவறான செயல்பாடால் திட்டங்கள் மக்களை சென்றடைய தாமதம் ஏற்படுகிறது. அரசின் பாரம்பரியமிக்க நிலங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும்.

நிலம் சம்பந்தப்பட்ட உரிமைகள் அமைச்சரவைக்கு மட்டுமே இருக்க வேண்டும். மக்களின் எதிர்காலம் கருதி நிலம் சம்பந்தப்பட்ட உரிமைகளை மாநில அரசிடமே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News