புதுச்சேரி

கோப்பு படம்

தாய்-மகனுக்கு கொலை மிரட்டல்கள்

Published On 2022-07-02 14:38 IST   |   Update On 2022-07-02 14:38:00 IST
  • சொத்து தகராறில் தம்பி மகளை கடத்தி சென்று சீரழித்து விடுவதாக மிரட்டல் விடுத்த அக்காள் குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • சகுந்தலா தனது மகன் பாபு பெயரில் எழுதி வைத்து விட்டார். இதனால் பாபு குடும்பத்தினர் மீது செல்வி குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

புதுச்சேரி:

சொத்து தகராறில் தம்பி மகளை கடத்தி சென்று சீரழித்து விடுவதாக மிரட்டல் விடுத்த அக்காள் குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை சாரம் சத்யாநகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு (வயது50). இவர் தனது தாய் சகுந்தலா, மனைவி சாந்தி, மகன் கோகுலகிருஷ்ணன், மகள் வினோதினி ஆகியோருடன் வீட்டின் கீழ் தளத்திலும், வீட்டின் மாடியில் இவரது அக்காள் செல்வி அவரது கணவர் ராமலிங்கம், மகன் பிரவீன்குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இவர்கள் குடியிருக்கும் வீடு சகுந்தலா பெயரில் இருந்த நிலையில் அந்த வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு சகுந்தலா தனது மகன் பாபு பெயரில் எழுதி வைத்து விட்டார். இதனால் பாபு குடும்பத்தினர் மீது செல்வி குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

அவ்வப்போது பாபு குடும்பத்தினரை செல்வி குடும்பத்தினர் திட்டி வந்தனர். இந்த நிலையில் செல்வி மற்றும் அவரது கணவர் ராமலிங்கம் திட்டியதால் பாபு வீட்டின் கதவையும், ஜன்னலையும் உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த செல்வியின் மகன் பிரவீன் குமார் தகாத வார்த்தை களால் திட்டி கதவை காலால் எட்டி உதைத்தார்.

இதையடுத்து பாபுவின் மனைவி சாந்தி கதவை திறந்து தட்டிக் கேட்டார். இதனால் ஆவேசமடைந்த செல்வி அவரது கணவர் ராமலிங்கம் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாபு, அவரது மனைவி சாந்தி, தாயார் சகுந்தலா ஆகிய 3 பேரையும் தாக்கினர். அதோடு ஆடைகளை கிழித்து மானபங்கம் செய்ய முயன்றனர்.

இதனால் பயந்து போன பாபு இதுபற்றி உருளையன்பேட்டை போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த பாபு , அவரது மனைவி சாந்தி, தாய் சகுந்தலா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது செல்வி தனது கணவர் மற்றும் மகனுடன் அங்கு வந்து பாபு குடும்பத்தையே வெட்டி கொலை செய்து விடுவோம், மேலும் உன் மகளை கடத்தி சென்று சீரழித்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.

இதையடுத்து பாபு இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News