புதுச்சேரி

சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தொழிலாளர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்த காட்சி.

கூட்டுறவு நூற்பாலையை அரசே இயக்க வேண்டும்- ரங்கசாமியிடம் சிவா எம்.எல்.ஏ.மனு

Published On 2022-11-11 12:30 IST   |   Update On 2022-11-11 12:30:00 IST
  • திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் சட்டசபையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
  • மேலாண் இயக்குநர் மற்றும் நிர்வாக மேலாளர்களை முழு நேரமாக ஆலையில் இருக்கவும், தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறவும் அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் சட்டசபையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை கடந்த 4 மாதங்களாக லே ஆப் கொடுத்து மூடிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை வாய்ப்பை இழந்து மிகவும் வறுமையில் வாடுகிறார்கள்.

எனவே, அரசே ஆலையை ஏற்று இயங்க செய்து, வேலையை இழந்து வாடும் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

மேலும், நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்கி, புதிய தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். ஆலையில் உள்ள ரூ.1 ½ கோடி மதிப்புள்ள நூல் பண்டல்களை விற்பனை செய்ய வேண்டும்.

நஷ்டத்தை குறைக்க தொழிலாளர்கள் புதிய வேலை பளுவை ஏற்கவும் தயாராக உள்ளனர். எனவே ஆலை புனரமைப்பிற்கு அரசு நிதி வழங்க வேண்டும்.

மேலாண் இயக்குநர் மற்றும் நிர்வாக மேலாளர்களை முழு நேரமாக ஆலையில் இருக்கவும், தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறவும் அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.

உணவு விடுதியை திறக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி ஆலையை திறந்து இயக்க உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது செந்தில்குமார் எம்எல்ஏ, தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், ஸ்பின்கோ தொழிற்சங்க நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, ரமேஷ், ராஜாராம், வெங்கடகிருஷ்ணன், செல்வம், ராஜசேகர், ஆறுமுகம், நாகராஜ், ராமமூர்த்தி, சுப்புராயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News