புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு விழா மேடையில் கவர்னர் - தி.மு.க. எம்.எல்.ஏ. மோதல்

Published On 2023-09-14 14:20 IST   |   Update On 2023-09-14 14:20:00 IST
  • புதுவையை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 128 பேர் புதுவையிலும் பயன்பெற்றுள்ளனர்.
  • தமிழகத்தில் இந்த திட்டத்தில் 63 லட்சம் பெண்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி:

புதுவை அரசின் சுகாதாரதுறை சார்பில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுதேடி வந்து பரிசோதனை செய்யும் சந்திராயன் ஆரோக்கிய திட்டத்தை கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

விழாவில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, பேசும்போது, வீடு தேடி மருத்துவம் என்று திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புதுவையில் வீடு தேடி மருத்துவம் திட்டம் முறையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

புதுவையில் பலருக்கு பல விதமான நோய்கள் உள்ளன. ஆனால் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுவை சுகாதாரதுறையில் போதிய வசதி இல்லை என குற்றம் சாட்டினார்.

மேலும், ஆயுஷ்மான் திட்டத்தால் புதுவைக்கு எந்த ஒரு பலனும் இல்லை. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட புதுவை மக்கள் மதிக்கப்படுவ தில்லை என்று கூறிய கென்னடி எம்.எல்.ஏ. புதுவை சுகாதாரதுறையின் செயல்பாடுகளை விமர்சித்து குற்றம் சுமத்தி பட்டியலிட்டார்.

இதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை பேசினார். அவர் பேசும்போது, புதுவையில்ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 597 பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.41 கோடியே 27 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் உப்பளம் தொகுதியை சேர்ந்த மக்கள் தான் அதிகம் பயன்பெற்றனர். புதுவையை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 128 பேர் புதுவையிலும் பயன்பெற்றுள்ளனர்.

தென்னிந்தியாவின் மருத்துவ தலைநகரமாக புதுவை மாறி வருகிறது என்றார்.

மேலும், புதுவையில் குடும்ப தலைவிகளுக்கான திட்டம் 17 ஆயிரம் பேருடன் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தகுதியான 71 ஆயிரம் குடும்ப தலைவிகளை தேர்வு செய்து வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தில் 63 லட்சம் பெண்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து, தமிழகத்தில் திட்டம் அறிவிக்கப்பட்டு 2 ½ வருடம் கழித்து வருகிற 15-ந் தேதிதான் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால், புதுவையில் சொன்னவுடன் கொடுத்து விட்டோம். தமிழகத்தில் அறிவித்த 2 ½ ஆண்டு காலத்திற்கும் சேர்த்து பணம் வழங்க வேண்டும் என்றார்.

சமையல் கியாஸ் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்தார். புதுவை அரசு ரூ.300 குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 குறைப்போம் என கூறியும் இதுவரை சிலிண்டர் விலையை குறைக்கவில்லை. நாம் விலையை குறைப்போம் என சொல்லாமல், விலையை குறைத்துள்ளோம்.

முதல்-அமைச்சர் மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டம் கொண்டு வந்தாலும் நான் அனுமதி தருவேன் என்றும் கவர்னர் தமிழிசை கூறினார்.

Tags:    

Similar News