கோப்பு படம்
- ஜிப்மர் டாக்டர் மர்மான முறையில் இறந்து போனார்.
- இந்த நிலையில் வினித் அகர்வால் தங்கியிருந்த வீட்டின் கதவு டமார் டமார் என மோதும் சத்தம் வந்தது.
புதுச்சேரி:
மேற்கு வங்கம் ஜனத்பூர் பகுதியை சேர்ந்தவர் வினித் அகர்வால்(வயது29). ஜிப்மர் டாக்டரான இவர் கதிர்காமம் ஆனந்தாநகர் கல்யாணசுந்தர் வீதியில் சிவமணி என்பவர் வீட்டின் 2-வது மாடியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு தங்கி பணிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் வினித் அகர்வால் தங்கியிருந்த வீட்டின் கதவு டமார் டமார் என மோதும் சத்தம் வந்தது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் சிவமணி வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.
அப்போது மாடி படிக்கட்டில் தலையில் பலத்த காயத்துடன் வினித் அகர்வால் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினித் அகர்வாலை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வினித் அகர்வால் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்து போனார்.
மன அழுத்தம் காரணமாக டாக்டர் வினித் அகர்வால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மாடியில் இருந்து கீழே குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்து போனாரா? என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சிவமணி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுபற்றி டாக்டர் வினித் அகர்வாலின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளனர்.