கோப்பு படம்
மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து காங்கிரஸ் கோர்ட்டுக்கு செல்லும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
- மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து காங்கிரஸ் கோர்ட்டுக்கு செல்லும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
- இத்தகைய போக்கு எதிர்காலத்தில் பா.ஜனதாவுக்கும் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவற்றை பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மாநிலங்களில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய போக்கு எதிர்காலத்தில் பா.ஜனதாவுக்கும் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பகுதியில் உள்ள ஆதீனங்கள் அரசியல் செய்ய தொடங்கியுள்ளனர். அவர்கள் மத கடமைகளை விட்டுவிட்டு அரசியல் செய்வது இந்து மத கோட்பாடுகளுக்கு இழுக்கை ஏற்படுத்தும் . ஆதீனங்கள் தங்கள் பதவி பொறுப்புகளிலிருந்து விலகி அரசியல் செய்ய வேண்டும். ஆதீனங்கள் அரசியல் செய்வதை ஏற்க முடியாது.
மின்துறை தனியார்மயமாக்கும் கோப்பை ரகசியமாக அனுப்பியுள்ளனர். அதுபற்றிய தகவல்கள் ஏதும் மின்துறையில் இல்லை. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற இருக்கிறோம். மேலும் காங்கிரஸ் மூத்த வக்கீல்களுடன் கலந்து பேசி கோர்ட்டுக்கு செல்வதற்கு முடிவெடுப்போம்.
சம்பளம் கேட்டு போராடிய விற்பனை குழு உறுப்பினர்கள் 14 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். உரிமைக்காக போராடிய ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். சம்பளம் வழங்கினால் அவர்கள் ஏன் போராட்டம் நடத்த போகிறார்கள்.?
புதுவை காரைக்காலில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையின் குண்டு கலாச்சாரம் மாகியிலும் பரவியுள்ளது. மாகியில் குண்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, நிலம், வீடு அபகரிப்பு ஆகியவை நாள்தோறும் நடக்கிறது. இதனால் புதுவையின் அமைதி குலைந்துள்ளது.
ரேசன் அரிசியை பாழாக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா.ஜனதா செய்தி தொடர்பாளர் இஸ்லாமிய இறை தூதரை விமர்சித்து பேசியது உலக அளவில் இந்தியாவுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.