புதுச்சேரி

பழமை வாய்த்த ஆலமரத்திற்க்கு பொதுமக்கள் பூஜை செய்த காட்சி.

சாலை பணிக்காக வெட்டப்பட்ட பழமையான ஆலமரம்

Published On 2023-01-03 09:07 GMT   |   Update On 2023-01-03 09:07 GMT
  • திருக்கனூர் பகுதியில் கடைவீதியில் ஒருபுறம் புதுவை திருக்கனூர் பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியும் உள்ளது.
  • நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி:

திருக்கனூர் பகுதியில் கடைவீதியில் ஒருபுறம் புதுவை திருக்கனூர் பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியும் உள்ளது.

சித்தலம்பட்டு கடைவீதி மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதியான தி.புதுக்குப்பம் பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தி.புதுக்குப்பம் பகுதியில் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 100 ஆண்டு பழமை வாய்ந்த மிகப்பெரிய ஆலமரம் இருந்தது.

சாலை விரிவாக்கப் பணிக்காக அகலப்படுத்தும் போது அந்த ஆலமரத்தினை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

அந்த மரத்தை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சியாக தி.புதுக்குப்பம் கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், புதுவை தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிர்வாகி ஆனந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் 3 நாட்கள் போராடி வேருடன் அந்த ஆலமரம் பிடுங்கப்பட்டது.

பிடுங்கப்பட்ட ஆலமரம் மீண்டும் அங்குள்ள பொம்மி ரெட்டி குளம் குளக்கரையில் கிராம மக்களின் முயற்சியினாலும், சமூக ஆர்வலர்களின் முயற்சியாலும் நடப்பட்டது.

வெட்டி அகற்றப்பட்ட மரம் மீண்டும் குளக்கரையில் நடப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிராம மக்கள் அந்த மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.

100 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தினை காப்பாற்ற பொதுமக்கள் எடுத்த முயற்சி அப்பகுதியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

Tags:    

Similar News