புதுச்சேரி

மின் பாதை அமைத்து தராததால் பாகூரில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மின் பாதைகள் சரி செய்யப்படாததால் விவசாயம் பாதிப்பு

Published On 2023-03-15 08:51 GMT   |   Update On 2023-03-15 08:51 GMT
  • புதுவையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • மின்பாதைகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

புதுச்சேரி:

விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் மற்றும் புதுவையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியின் போது வயல்வெளி பகுதியில் இருந்த மின் பாதைகள் அப்புறப்படுத்தப்பட்டது. ஒரு வருடங்கள் கடந்த நிலையில் உயர் மின் அழுத்த மின்பாதை மட்டுமே சரி செய்யப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் விவசாய தேவைக்கான மின் பாதைகள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாகூர் கிழக்கு வெளி பகுதியில் அப்புறப்படுத்தப்பட்ட மின் பாதைகள் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் உள்ள சுமார் 100-க்கு மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுகான போர்வெல்லுக்கு மின்சாரம் கிடைக்காமல், பாசன நீரின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை மின்துறை உள்ளிட்ட துறை அதிகாரி சந்தித்து வயல்வெளியில் உள்ள போர்வெளுக்கான மின்பாதைகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் அதிகாரிகள் அது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. அது தேசிய நெடுஞ்சாலை துறையின் பணி என்பதால் அவர்கள் தான் அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறிவிட்டனர்.

இந்நிலையில், பாகூர் விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பாகூர் -கன்னி கோவில் சாலை புறவழிச் சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் பணியை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மின்துறை இளநிலை பொறியாளர் ஸ்டாலின் சம்பவத்தை சென்று விவசாயகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் தரப்பில் இன்னும் 10 நாட்களுக்குள் விவசாயத்திற்கான மின்பாதைகள் சீரமைப்பு செய்து கொடுப்பதாக உத்திரவாதம் அளித்தனர் அதன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை விட்டு கலந்து சென்றனர்.

Tags:    

Similar News