புதுச்சேரி

மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவை புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்த போது எடுத்த படம்.

நாராயணசாமி மீது மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் புகார்

Published On 2022-07-16 07:22 GMT   |   Update On 2022-07-16 07:22 GMT
  • சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிபூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.
  • கட்சியில் நாராயணசாமியின் தலையீடை அனுமதிக்கக்கூடாது என காங்கிரசில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

புதுச்சேரி:

சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிபூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும். கட்சியில் நாராயணசாமியின் தலையீடை அனுமதிக்கக்கூடாது என காங்கிரசில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ஒத்த கருத்துடைய நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்று கட்சித்தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர். அவர்களை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர்.

இதனிடையே முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினர் களம் இறங்கியுள்ளனர். கோஷ்டி பூசலுக்கு முன்னாள் அமைச்சர்கள்தான் காரணம் எனவும், அவர்கள் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நாராயணசாமிக்கு எதிரான அணியினர் பெங்களூருவில் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவை சந்தித்தினர். புதுவை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, சிவசண்முகம், செயலாளர்கள் மு.ப.சரவணன், பி.எம்.சரவணன், சூசைராஜ், மாவட்ட தலைவர் ரமேஷ், பிராச்சாரக்குழு தலைவர் திருநாவுக்கரசு, தாழ்த்தப்பட்டோர் அணி தலைவர் வீரமுத்து, சேவாதள் தலைவர் குலசேகரன், வட்டாரத்தலைவர் குமரன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் 2021 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்திக்க முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர்தான் காரணம். இதை எங்களால் நிரூபிக்க முடியும். புதுவையில் நாளுக்கு நாள் காங்கிரஸ் தேய்ந்துகொண்டிருக்கிறது.

தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் கட்சி மேலிட தலைவர்கள் ஒப்புதல் அளித்தபடி மாநில தலைவர் மாற்றப்படவில்லை. புதுவை மக்களின் ஆதரவையும், பெரும்பாலான கட்சியினர், தொண்டர்களின் ஆதரவையும் நாராயணசாமி இழந்துவிட்டார். புதுவை காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளில் இருந்து அவரை விலக்கி வைக்க வேண்டும். புதுவைக்கு புதிய மாநில தலைவரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை ஏற்றுக்கொண்ட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், ராகுல்காந்தியை சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News