- புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி சிறப்பாக உள்ளது
- இதற்கு சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
புதுச்சேரி:
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி சிறப்பாக உள்ளது என்றும், புதுவை மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் விளைவிக்க சமூக அமைப்புகள் முயன்று வருவதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று மிரட்டல் விடுத்து இருந்தன.
இது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன், ரிச்சர்ட் மற்றும் பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வை மிரட்டியது உரிமை மீறல் பிரச்சினை. எனவே மிரட்டல் விடுத்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்தை கூறினர். இதைத்தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வை மிரட்டிய சமூக அமைப்பு கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் அவர் கூறும் போது, புதுவையில் 1567 அமைப்புகளை தடை செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீறி செயல்படுவர்கள் கைது செய்யப்படுவார்கள் எச்சரிக்கை விடுத்தார்.