புதுச்சேரி

ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.98 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபர்

Published On 2022-11-09 10:51 IST   |   Update On 2022-11-09 10:51:00 IST
  • ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.98 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

பாகூர் அருகே செலிமேடு டி.என்.பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீத்தாராமன். இவர் மினிவேன் ஓட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது செல்போன் நம்பரில் ஒருவர் பேசினார்.

ஒரு தனியார் நிதி நிறுவனம் பெயரை சொல்லி பேசிய ஒரு வாலிபர் தான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.5 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு ரூ.5 ஆயிரத்து 500 கட்டினால் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதன்படி சீத்தாராமன் தனது வங்கி கணக்கில் இருந்து கூகுல் பே மூலம் ரூ.5 ஆயிரத்து 500 அனுப்பி வைத்தார். பின்னர் மீண்டும் ரூ.10 ஆயிரம் செலுத்துமாறு அந்த வாலிபர் கூறியதால் அந்த பணத்தையும் சீத்தாராமன் அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு அந்த வாலிபர் நீங்கள் செலுத்தும் தொகை மீண்டும் திருப்பி தரப்படும் என்று கூறியதின் அடிப்படையில் சீத்தாராமன் தொடர்ந்து ரூ.98 ஆயிரம் வரை கூகுல் பே மூலம் அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு அந்த வாலிபர் போனில் பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த சீத்தாராமன் அந்த வாலிபரின் செல்போனில் தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை.

இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சீத்தாராமன் தற்போது மோசடி குறித்து (சைபர் கிரைம்) போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News