கோப்பு படம்.
705 குழந்தைகள் காய்ச்சலால் பாதிப்பு
- புதுவையில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு புதுவை மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.
பள்ளி மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் காணப்படுகிறது. குழந்தைகளிடையே ஏற்படும் இந்த காய்ச்சல் பெரியவர்களுக்கும் பரவுகிறது. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு புதுவை மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் முன்னெச்சரி க்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுவையில் நேற்று 270 சிறுவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவசர சிகிச்சையில் 410 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். இதேபோல் காரைக்காலில் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சைக்கு 15 சிறுவர்கள் வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அவசர சிகிச்சையில் 10 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மொத்தமாக புதுவை, காரைக்காலில் 705 சிறுவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் புதுவையில் 42 பேரும், காரைக்காலில் 8 பேரும் என மொத்தம் 50 குழந்தைகள் மருத்துவனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது புதுவையில் 155 சிறுவர்களும், காரைக்காலில் 12 சிறுவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.