புதுச்சேரி

லாஸ்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சாவிற்ற வாலிபர்களையும் அவர்களை கைது செய்த போலீசார்களையும் படத்தில் காணலாம்.

கஞ்சா விற்ற 7 பேர் கைது

Published On 2022-07-29 09:29 GMT   |   Update On 2022-07-29 09:29 GMT
  • புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
  • புதுவையில் பள்ளி-கல்லூரிகள் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுவையில் பள்ளி-கல்லூரிகள் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆனாலும் தொடந்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதற்கிடையே லாஸ்பேட்டை தாகூர் கலை கல்லூரி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற 3 பேரை பிடித்து அவர்களின் சட்டைப்பைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது சட்டைபையில் அவர்கள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தனர். மொத்தம் ஒரு கிலோவுக்கும் மேலாக அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை விசாரணை நடத்தினர்.

விசாரனையில் அவர்கள் லாஸ்பேட்டை மடுவு பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராம்கி வயது (25). லாஸ்பேட்டை செண்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த துரை (22) மற்றும் லாஸ்பேட்டை ஏர்போட்டு பின் புறப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற ராம் (24) என்பதும் இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது போல் கோரிமேடு காமராஜர் நகர் மெயின் ரோடு பல் மருத்துவ கல்லூரி அருகே இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்ததின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கஞ்சா விற்ற 2 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான மொரட்டாண்டியை சேர்ந்த ஹரிகரன் (21) மற்றும் கோரிமேடு காமராஜர் நகர் கென்னடி வீதியை சேர்ந்த சுகுமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதுவை பஸ்நிலையம் பின்புறம் உள்ள மங்கள லட்சுமி நகர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 17வயது சிறுவன் மற்றும் ஆட்டுப்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்த அருண் (22) ஆகிய 2 பேரை உருளையன் பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆண்ட்ரூஸ் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News