புதுச்சேரி

கொலை வழக்கில் பெயரை சேர்த்ததற்கு பா.ஜனதா பிரமுகர் வெட்டி படுகொலை

Published On 2023-03-27 09:19 GMT   |   Update On 2023-03-27 09:19 GMT
  • கொலையை கண்டித்து செந்தில்குமரன் ஆதரவாளர்கள் விழுப்புரம்-புதுவை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
  • கொலை குறித்து வில்லியனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேதராப்பட்டு:

புதுவை வில்லியனூர் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 42). மங்கலம் தொகுதி பா.ஜனதா பிரமுகரான இவர் துணிக்கடை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான இவர் தன்னுடைய ஆதரவாளர்களுக்காக போலீஸ் நிலையங்களில் பஞ்சாயத்து செய்து வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இவர் பிரபல ரவுடி திருக்காஞ்சியை சேர்ந்த நித்தி என்ற நித்தியானந்தத்தை தனது ஆதரவாளராக உருவாக்கிக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று விழுப்புரம் பைபாஸ் கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பேக்கரியில் இருந்த போது முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். பின்னர் அவரது கழுத்து, தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தை பார்த்த அந்தப் பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமரன் உடலை மீட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையை கண்டித்து செந்தில்குமரன் ஆதரவாளர்கள் விழுப்புரம்-புதுவை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த கொலை குறித்து வில்லியனூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது,

கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவையாறு பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் முள் காட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார். கஞ்சா விற்பனை செய்வதை பிரவீன் போலீசில் காட்டிக் கொடுத்ததற்காக சிறைக்குச் சென்று திரும்பிய முகிலன் தலைமையிலான கும்பல் பிரவீனை கொலை செய்தது.

இந்த கொலையில் நித்தி என்ற நித்தியானந்தருக்கு தொடர்பு இருப்பதாக வில்லியனூர் போலீசார் அவரது பெயரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால் இதுவரை இந்த வழக்கில் நித்யானந்தம் கைதாகாமல் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். பிரவீன் கொலையில் நித்யானந்தம் பெயரை சேர்ப்பதற்கு பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் காரணமாக இருந்ததாக நித்தியானந்தம் கருதியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக செந்தில்குமரனும் நித்தியானந்தமும் பேச்சுவார்த்தை இல்லாமல் எதிரும் புதிருமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் நித்தியானந்தம் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் உருவையாறு கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த ராஜவேலு, ராஜாமணி, ஏழுமலை, பிரதீப் உள்ளிட்ட கூலிப்படை கும்பல் மூளையாக செயல்பட்டு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தெரிகிறது.

மேலும் வில்லியனூர் கொலை நடந்த பகுதியில் கடைகள் மூடப்பட்டுள்ளது. செந்தில்குமரன் வசித்து வரும் வீட்டருகே 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கொலையில் நித்தி என்ற நித்தியானந்தத்தை கைது செய்கின்ற வரையில் உடலை பெற மாட்டோம் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து வில்லியனூர் பகுதியில் பதற்றம் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Similar News