புதுச்சேரி

கோப்பு படம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் சாவு

Published On 2022-06-14 04:38 GMT   |   Update On 2022-06-14 04:38 GMT
  • திடீர் பிரேக் பிடித்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
  • இவர் தவளக்குப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

புதுச்சேரி:

திடீர் பிரேக் பிடித்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

புதுவை குரும்பாப்பேட் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது57). இவர் தவளக்குப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

பழனிவேல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

புதுவை-விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையத்தில் ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடை அருகே வந்த போது திடீரென ஒருவர் குறுக்கு பாய்ந்ததால் அவர் மீது மோதாமல் இருக்க பழனிவேல் திடீரென பிரேக் போட்டார்.

இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து பழனிவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி பழனிவேல் உடனடியாக தனது மகன் சிவராமகிருஷ்ணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து தனது நண்பர் உதவியுடன் தந்தையை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனிவேல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

புதுவை உழவர்கரை நண்பர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (67). வயது முதிர்ச்சி காரணமாக இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். ஜெயபிரகாசத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இவர் மோட்டார் சைக்கிளில் மது கடைக்கு சென்று மது குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். புதுவை-விழுப்புரம் சாலையில் திருமலை தாயார்நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெயபிரகாசம் கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயபிரகாசத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜெயபிரகாசம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயபிரகாசம் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த 2 விபத்துக்கள் குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News