வழிபாடு
உடலில் கத்திப்போட்டு ஊர்வலமாக சென்ற பக்தர்கள்.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் உடலில் கத்திப்போட்டு பக்தர்கள் வழிபாடு

Published On 2022-04-21 09:44 IST   |   Update On 2022-04-21 09:44:00 IST
இந்த ஊர்வலத்திற்கு முன்னால் தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கையில் கத்திகளுடன் தீசுக்கோ, தீசுக்கோ என்று சத்தமிட்டு ஆடியபடி வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4-15 மணிக்கு நடக்கிறது.

விழாவையொட்டி ஒவ்வொரு சமூகத்தினரும் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். அதன்படி தேவாங்கர் சமூகம் சார்பில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

உடுமலை பூமாலை சந்தில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதில் ஒரு வாழைப்பழத்தில் கத்தி சொருகப்பட்டு அந்த கத்தியில் தீர்த்தக்குடம் நூல்களால் கட்டி தொங்க விடப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இந்த ஊர்வலத்திற்கு முன்னால் தேவாங்கர் சமூகத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கையில் கத்திகளுடன் தீசுக்கோ, தீசுக்கோ என்று சத்தமிட்டு ஆடியபடி வந்தனர். அப்போது அவர்கள் உடலில் கத்தி போட்டு வந்ததில் ரத்தம் சொட்டியது. உடலில் ரத்தம் சொட்ட, சொட்ட பக்தி பரவசத்துடன் கத்தி போட்டுக்கொண்டே ஆடியபடி சென்றனர். இந்த காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த ஊர்வலத்தில் பெண் கள் தீர்த்தக்குடம் எடுத்து சென்றனர்.

இந்த ஊர்வலம் தளி சாலை, சீனிவாசா வீதி, வ.உ.சி.வீதி, பசுபதி வீதி, வடக்கு குட்டைவீதி, பெரிய கடைவீதி வழியாக பொள்ளாச்சி சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று மாலை நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் உடுமலை மாரியம்மன் கோவிலில் திரண்டுள்ளனர்.

Similar News