வழிபாடு
பவுர்ணமியை முன்னிட்டு மலை அடிவாரத்தில் இருந்து புறப்பட்ட பக்தர்கள்.

பவுர்ணமியை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-03-17 11:17 IST   |   Update On 2022-03-17 11:17:00 IST
பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்துக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கு முன்பு குவிந்தனர்.

காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்துக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த நிலையில் சதுரகிரி கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் மலைப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் வனத்துறையினர் பக்தர்களை எந்தவித சோதனையும் செய்யாமல் அனுப்பி வருவதால் அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது.

பாலிதீன் பைகளுக்கு தடை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை என்ற தடைகள் அறிவிப்பளவில் இருந்தாலும் வழக்கமாக சோதனை செய்யும் நடைமுறை என்பது தற்போது இல்லை.

வனத்துறை அலட்சியத்தால் சோதனை ஏதும் செய்யப்படாமல் பக்தர்கள் சென்று வருகின்றனர். இனிவரும் காலங்களிலாவது வனத்துறையினர் பக்தர்களை சோதனை செய்து வனப்பகுதிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியன் (வயது 74) சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்து விட்டு இறங்கினார். பச்சரிசி மேடு பகுதியில் வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த சுப்பிரமணியன் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News