வழிபாடு
துவாக்குடி திருநெடுங்களநாதர், உத்தமர் கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற காட்சி.

ஆருத்ரா தரிசனம்: திருநெடுங்களநாதர், உத்தமர், திருவாசி கோவில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-12-20 09:39 IST   |   Update On 2021-12-20 09:39:00 IST
திருவாதிரை தினத்தையொட்டி திருச்சி அருகே உள்ள திருநெடுங்களநாதர், உத்தமர், திருவாசி கோவில்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
துவாக்குடியிலுள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன வழிபாடுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

அதன்படி திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு நடைபெற்றது.

அப்போது உற்சவர்களான நடராஜர், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகியோ ருக்கு பால், தயிர், இளநீர், தேன் பஞ்சாமிர்தம், பழங்கள், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, தேவ வாத்தியம் இசைக்க மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி நடராஜரை வழிபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாக அலுவலர் வெற்றிவேல் மற்றும் அர்ச்சகர்கள் சோமசுந்தர சிவாச்சாரியார், ரமேஷ், கணேஷ் சிவாச்சாரியர் சிறப்பாக செய்திருந்தனர்.

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, கலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உற்சவர் நடராஜருக்கு பால், தயிர், தேங்காய் துருவல், தேன், இளநீர், மாதுளை, பன்னீர் உள்ளிட்ட 36 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு கண்டு கோவில் பிரகாரத்தை வலம் வந்து நடராஜருக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோன்று திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு பால், தயிர், மஞ்சள்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

Similar News